Published : 07 Jan 2023 04:02 AM
Last Updated : 07 Jan 2023 04:02 AM
சென்னை: பணி நிரந்தரம் செய்யக் கோரி, 6-வது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்த ஒப்பந்த செவிலியர்கள், மருத்துவக் கல்வி இயக்குநரகத்தை முற்றுகையிட்டதால் கைது செய்யப்பட்டனர்.
கரோனா தொற்று காலத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒப்பந்தம் அடிப்படையில் தற்காலிக செவிலியர்களாக நியமிக்கப்பட்டனர். ஒப்பந்த காலத்துக்கு பின்னர், அவர்களில் 3 ஆயிரம் பேருக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டது. இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படாததால் சுமார் 800 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ஒப்பந்தம் டிச.31-ம் தேதியுடன் முடிவடைந்ததால், 2,472 பேருக்கு பணி நீட்டிப்பு இல்லை என்ற தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 1-ம் தேதியில் இருந்து ஒப்பந்த செவிலியர்கள் தமிழகம் முழுவதும் தர்ணா, ஆர்ப்பாட்டம், முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்களும் வலியுறுத்திவருகின்றனர். இந்நிலையில், 6-வதுநாளாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகம் (டிஎம்இ) அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு 500 ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, செவிலியர்களைக் கைது செய்த போலீஸார், அவர்களை அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கூறும்போது, “கரோனா தொற்று காலத்தில் நியமிக்கப்பட்ட அனைத்து செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். எங்களுக்கு மீண்டும் தற்காலிக ஒப்பந்த மாற்று பணி தேவையில்லை. எங்களுடைய பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT