Published : 07 Jan 2023 06:56 AM
Last Updated : 07 Jan 2023 06:56 AM
தஞ்சாவூர்: வடக்கும், தெற்கும் இணைந்து பணியாற்றினால்தான் இந்த நாடு சுபிட்சமாக இருக்கும் என திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் ஆராதனை விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆராதனை விழா நேற்று மாலை தொடங்கியது. ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்ஸவ சபாவின் செயலாளர் ஏ.கே.பழனிவேல் வரவேற்றார். சபாவின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கேற்றி வைத்துப் பேசியதாவது:
தியாகபிரம்மம் ஆந்திர பிரதேசத்திலிருந்து தமிழகம் வந்து குடியமர்ந்து, தெலுங்கும், வட மொழியும் கற்றுக் கொண்டார். அதுதான் மிகப் பிரம்மாண்டமான எண்ணம். அப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கும்போதுதான் இங்கே தியாகபிரம்மத்தின் இசையைக் கேட்க பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வந்தனர்.
வடக்கும், தெற்கும் இணைந்து பணியாற்றினால்தான் இந்த நாடு சுபிட்சமாக இருக்கும். தமிழ் தான் நமக்கு உயிர். மற்ற மொழிகளைக் கற்கவும், மதிக்கவும் வேண்டும். இன்னொரு மொழியைக் கற்கும்போதுதான் தமிழ் மொழியில் உள்ள நல்லவற்றை, அந்த மொழி பேசுபவர்களிடம் எடுத்துச் சொல்ல முடியும். எனவே, மற்ற மொழிகளைக் கற்றுக் கொள்ள தயக்கம் காட்டக்கூடாது. இதைச் சொல்வதால், தமிழை குறைத்துக் கூறுவதாக அரசியல் செய்யக் கூடாது.
தியாகபிரம்மம் தமிழகத்தில் இருந்து தெலுங்கு கீர்த்தனைகளை பாடி உலகம் முழுவதுமுள்ள இசை ரசிகர்களை ஈர்த்தார். இதன் மூலம் மொழியின் வல்லமையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, நாம் இப்போது விஞ்ஞானத்தில் கண்டுபிடித்ததை, அன்றைய மெய்ஞானம் திருவையாறில் நடந்துள்ளது. தமிழையும், ஆன்மிகத்தையும் பிரிக்க முடி யாது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT