Published : 07 Jan 2023 06:16 AM
Last Updated : 07 Jan 2023 06:16 AM

அரசியல் இயக்கங்கள்போல் மொழியை காப்பாற்ற வேண்டிய கடமை எழுத்தாளர்களுக்கும் உண்டு: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: அரசியல் இயக்கங்களைப் போல் மொழியைக் காப்பாற்ற வேண்டிய கடமை எழுத்தாளர்களுக்கும் இருக்க வேண்டும் என சென்னை புத்தகக் காட்சி தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான46-வது சென்னை சர்வதேச புத்தகக்காட்சியை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து, 2023-ம் ஆண்டுக்கான ‘முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது’க்குத் தேர்வான தேவி பாரதி (நாவல்), சந்திரா தங்கராஜ் (சிறுகதை), தேவதேவன் (கவிதை), சி.மோகன் (மொழிபெயர்ப்பு), பா.ரா.சுப்ரமணியன் (உரைநடை), பிரளயன் (நாடகம்) ஆகிய 6 பேருக்கும் விருதுடன், தலா ரூ.1 லட்சம் தரப்பட்டது. இதுதவிர பபாசிசார்பில் பதிப்பகச் செம்மல் விருது,சிறந்த நூலகர் விருது, சிறந்த சிறுவர் அறிவியல் நூல் உட்படசிறப்பு விருதுகள் 9 பேருக்கு அளிக்கப்பட்டன. இந்த விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது: ஒருகாலத்தில் சென்னையில் மட்டுமே புத்தகக் காட்சி நடந்துவந்தது. அந்நிலையை மாற்றுவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்துவதற்கு உத்தரவிட்டு, அதற்காக ரூ.5.5 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. அதன் விளைவாக பெரும்பாலான மாவட்டங்களில் புத்தகக் காட்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் மாவட்டந்தோறும் இலக்கிய எழுச்சி, அறிவு மலர்ச்சி ஏற்பட்டு வருகிறது.

அடுத்த ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டாக அமைந்திருக்கிறது. 2008-ம் ஆண்டுமுதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதைப் பெற்றவர்கள் இதுவரை 100 பேர் என்ற எண்ணிக்கையைத் தொட்டிருக்கிறது. இது எத்தனை பொருத்தமாக அமைந்திருக்கிறது.

பதிப்பகங்களோடு போட்டி போடக்கூடிய அளவுக்கு தமிழக அரசும் ஏராளமான நூல்களை வெளியிட்டு வருகிறது. கடந்த ஒன்றரைஆண்டு காலத்தில் 173 நூல்களை அரசின் சார்பில் வெளியிட்டிருக்கிறோம்.

நிரந்தரமாக புத்தகப் பூங்கா அமைக்க சென்னையில் இடம்வழங்கப்படும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார். அதன்படி இடம் தேர்வு செய்யப்பட்டதும், அதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்.

46-வது சென்னை புத்தக கண்காட்சியில் `இந்து தமிழ் திசை' நாளிதல் சார்பில்
505, 506-ல் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. படம் : ம.பிரபு.

எழுத்தும், இலக்கியமும் அவசியம்: இதுபோன்ற புத்தகச் சந்தைகளும் இலக்கிய விழாக்களும் எழுத்தையும், இலக்கியத்தையும் இன்றைய இளைய தலைமுறைக்கு தமிழ் உணர்வை ஊட்டுவதற்காகப் பயன்பட வேண்டும். எனவே மொழியைக் காப்பதற்கான கடமை என்பது எங்களைப் போன்ற அரசியல் இயக்கங்களைப் போலவே எழுத்தாளர்களுக்கும் இருந்தாக வேண்டும். தங்களது எழுத்தை மொழி காப்பதற்கான மக்கள் எழுத்தாகப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும்போது, ‘‘தமிழகத்தில் தற்போது 21 மாவட்டங்களில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள மாவட்டங்களிலும் 2 மாதத்தில் புத்தகக் காட்சி நடத்தி முடிக்கப்படும். இந்தாண்டு 30 நாடுகள் பங்கேற்கும் வகையில் சர்வதேச புத்தகக் காட்சி ஜன.16, 17, 18-ம் தேதிகளில் நடைபெற உள்ளது’’ என்றார்.

இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், பபாசி தலைவர் எஸ்.வயிரவன், செயலாளர் எஸ்.கே.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நடப்பாண்டு புத்தகக் காட்சியில் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் மாலையில் நடைபெறும் சிந்தனை அரங்கில் தலைசிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர். ஜன.22-ம் தேதி வரை நடைபெற உள்ள இக் கண்காட்சியை தினமும் காலை 11 முதல் இரவு 8.30 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். நுழைவுக் கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படும். கூடுதல் விவரங்களை www.bapasi.com என்ற இணையத்தில் அறிந்து கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x