Published : 07 Jan 2023 06:25 AM
Last Updated : 07 Jan 2023 06:25 AM
திருச்சி: திருச்சி விமானநிலையத்தில் கடந்தாண்டில் ரூ.34.7 கோடி மதிப்பிலான 157 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விமானநிலையத்தில் இருந்து நாள்தோறும் 8 உள்நாட்டு விமானங்கள், 13 வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்திய அளவில் அதிக வெளிநாட்டு பயணிகளை கையாண்ட வகையில் திருச்சி விமானநிலையம் 11-வது இடத்தில் உள்ளது. மேலும் வேலை நிமித்தமாக வெளிநாடு சென்று வரும் பயணிகளை(புளூ கார்டு) அதிகளவில் கையாண்டு வருகிறது. கரோனா ஊரடங்குக்கு பிறகு மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் விதிக்கப்பட்ட விசா கட்டுப்பாடுகளால் அந்த நாடுகளுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளையில், துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நாடுகளுக்கு சென்று வரும் பயணிகள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் ஒருபுறம் திருச்சி விமானநிலையத்துக்கு அந்நிய செலவாணி வருவாய் அதிகரித்தாலும், மற்றொருபுறம் சட்டவிரோதமாக கடத்தி வரப்படும் தங்கம், எலெக்ட்ரானிக் பொருட்களால் நம் நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
திருச்சி விமானநிலையத்தில் கடந்த ஆண்டு மட்டும் ரூ.34.7 கோடிமதிப்பிலான 157 கிலோ தங்கம், ரூ.1.29 கோடி மதிப்பிலான எலெக்ட்ரானிக் பொருட்கள், ரூ.3.70 கோடிமதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், பறிமுதல் செய்யப்பட்ட 117 கிலோ கடத்தல் தங்கத்துக்கு (திரும்ப வழங்கப்பட்டவை) அபராதம் விதிக்கப்பட்ட வகையில் ரூ.9 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக சுங்கத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து திருச்சி மண்டல சுங்கத் துறை அதிகாரி கூறும்போது,‘‘இதுபோன்ற கடத்தல் சம்பவங்களில் வெளிநாடுகளில் வேலை பார்த்துவிட்டு நாடு திரும்பும் அப்பாவிகளை கடத்தல் கும்பல் சாதுர்யமாக பயன்படுத்துகிறது.
மேலும், தங்கம் கடத்தலுக்காக டூரிஸ்ட் விசாவில் வெளிநாடு சென்று வருபவர்களும் (குருவிகள்) ஈடுபடுத்தப்படுகின்றனர். இதையடுத்து, தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செயலி மூலம் 150-க்கும் மேற்பட்ட குருவிகள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு, அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, திருச்சி விமானநிலையத்தில் இரவு 10 மணி முதல் 2 மணி வரை 9 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் வரும் அனைத்து பயணிகளையும் சோதனை நடத்தமுடியாது என்பதை கணித்த கடத்தல் கும்பல், அந்த நேரங்களில் கடத்தலை அதிகரிக்கும் நோக்கில், வெளிநாடுகளில் இருந்து வரும் அப்பாவிகளை அணுகி அவர்கள் மூலமாக தங்கம் கடத்தலைநடத்தி வருகின்றனர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT