Published : 06 Jan 2023 05:15 PM
Last Updated : 06 Jan 2023 05:15 PM
புதுச்சேரி: கோரிக்கைகளை நிறைவேற்றாததால் முதல்வர் ரங்கசாமியை கடுமையாக விமர்தித்து, கூட்டணி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ போராட்டம் தொடங்கியுள்ளார். முதல்வரை விமர்சித்துள்ளதற்கு கூட்டணிக் கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் ஆந்திரத்தையொட்டி கோதாவரி ஆற்றங்கரையிலுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக மல்லாடி கிருஷ்ணாராவ் வென்று வந்தார். அவர் கடந்த ஆட்சியில் காங்கிரஸில் இருந்து விலகி என்.ஆர்.காங்கிரஸில் இணைந்தார். ஏனாமில் கடந்த தேர்தலில் மல்லாடி கிருஷ்ணாராவ் போட்டியிடாமல் ரங்கசாமி போட்டியிட்டார். ஆனால், கோலப்பள்ளி சீனிவாச அசோக் சுயேட்சையாக போட்டியிட்டு முதல்வர் ரங்கசாமியை தோற்கடித்து வென்றார். அதையடுத்து பாஜகவை ஆதரிக்கத் தொடங்கினார்.
முதல்வர் ரங்கசாமியை தோற்கடித்த அவர், "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எம்எல்ஏ அலுவலகம் தரவில்லை" என்று பேரவையில் புகார் தெரிவித்திருந்தார். அத்துடன் மக்கள் நலத்திட்டங்கள் நடைபெறவில்லை என்றும் தெரிவித்திருந்தார். குறிப்பாக முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவின் தூண்டதலினால்தான் பணிகள் நடக்கவில்லை. பட்டா தரவில்லை. தொகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர், அமைச்சர்களிடம் மனுவும் ஏனாம் எம்எல்ஏ கோலப்பள்ளி சீனிவாச அசோக் தந்திருந்தார்.
அண்மையில் தனது ஆதரவாளர்களுடன் சட்டப்பேரவைக்கு வந்த ஏனாம் எம்எல்ஏ கோலப்பள்ளி சீனிவாச அசோக் கடந்த மாதம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். அதையடுத்து சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று அவரது கோரிக்கைகளில் 15-ஐ நிறைவேற்றுவதாக முதல்வர் ரங்கசாமி வாக்குறுதி தந்தார். ஆனால் அக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இச்சூழலில் புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் இன்று முதல் எட்டாம் தேதி வரை கலை விழா நடைபெறுகிறது.
இவ்விழாவில் முதல்வர், அமைச்சர், உயர் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏனாம் வளர்ச்சிக்காக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியபோது 15 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்வர் ரங்கசாமி ஒப்புக்கொண்டார். அதனை நிறைவேற்றி ஏனாம் வந்தால் பூ தூவி வரவேற்போம். நிறைவேற்றாமல் ஏனாமுக்கு வந்தால் மக்களுடன் எதிர்ப்பை தெரிவிப்போம் என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இச்சூழலில் இந்நிகழ்வு தொடக்கவிழாவில் அமைச்சர் லட்சுமி நாராயணன் பங்கேற்க சென்றுள்ளார். முதல்வர் ரங்கசாமி வரும் 8ம் தேதி இறுதிநாள் நிகழ்வில் பங்கேற்கிறார். கூட்டணியிலுள்ள அரசின் அமைச்சர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏனாம் நிர்வாக அலுவலகத்தின் முன்பாக ஏராளமான மக்களுடன் பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு இச்சூழலில் என்.ஆர்.காங்கிரஸ் தரப்பினர் டிஜிபியிடம் எம்எல்ஏ மீது புகார் தந்துள்ளனர். அதில், "கலவரத்தை தூண்டும் வகையிலும், முதல்வரை அவமரியாதையாக பேசிய எம்எல்ஏ மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யவேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.
அதன் நகலை பேரவைத்தலைவர், ஆட்சியர் ஆகியோருக்கும் தந்துள்ளனர். அதேபோல் அதிமுக மாநில செயலர் (ஈபிஎஸ்) அன்பழகன் கூறுகையில், "முதல்வர் மீது கடுமையாக விமர்சித்து எம்எல்ஏ பேசியுள்ளார். இது ஆணவத்தின் உச்சக்கட்டம். முதல்வருக்கு எதிராக மக்களை தூண்டுகிறார். சுயேட்சை எம்எல்ஏ ஆதரவை பாஜக விலக்கவேண்டும். ஏனாமில் பேசிவிட்டு அவர் புதுச்சேரி வரும்போது அவரின் நிலை என்னவாகும்- சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதத்தில் பேசிய எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்" என்றார். ஏனாமில் பதற்றம்: ஏனாமில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் புதுச்சேரியில் இருந்து 50 போலீஸார் பாதுகாப்பு பணிகளுக்காக சென்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT