Published : 06 Jan 2023 03:19 PM
Last Updated : 06 Jan 2023 03:19 PM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சியில் உள்ள வேங்கைவயல் மற்றும் இறையூரில் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட இரு வழக்கறிஞர்கள் குழு நேற்று விசாரணை நடத்தியது.
வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்தது டிச.26-ம் தேதி தெரியவந்தது. இதுகுறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இறையூர் அய்யனார் கோயிலுக்குள் வேங்கைவயல் பகுதி மக்களை செல்ல விடாமல் தடுத்தது, இரட்டைக்குவளை முறை பின்பற்றப்பட்டது குறித்து, 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்த வெள்ளனூர் காவல் நிலையத்தினர், அதில், மூக்கையா, சிங்கம்மாள் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இறையூர், வேங்கைவயல் பகுதியில் சாதிய பாடுபாடு இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களும் சமத்துவமாக நடந்துகொள்ளும் வகையில் இறையூர் அய்யனார் கோயிலில் சமத்துவப் பொங்கல் நிகழ்ச்சி, பொது வழிபாடு அண்மையில் நடத்தப்பட்டது. அதில், மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், ஆட்சியர் கவிதா ராமு, எஸ்.பி வந்திதா பாண்டே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். குடிநீர் தொட்டியில் மனிதக கழிவுகள் கலக்கப்பட்டது, இரட்டைக் குவளை முறையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் அடுத்தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டது தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், அத்தகைய செயலில் ஈடுபட்டது யாரென்று இதுவரை கண்டறியப்படவில்லை. இதைக் கண்டறியும் விதமாக புதுக்கோட்டை ஏடிஎஸ்பி ரமேஷ்கிருஷ்ணன் தலைமையில் 2 டிஎஸ்பிகள் உட்பட 11 பேர் கொண்ட குழுவை திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் அண்மையில் நியமித்தார்.
இக்குழுவினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, கைதாகி உள்ள சிங்கம்மாள், மூக்கையா ஆகியோர் ஜாமீன் கோரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கள நிலவரத்தை விசாரிப்பதற்காக இரு வழக்கறிஞர்கள் கொண்ட விசாரணைக் குழுவை நேற்று முன்தினம் நியமித்தார். மேலும், விசாரணை அறிக்கையை இன்று (ஜன.6) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியதுடன், ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையை ஜன.7-ம் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்தார்.
இதையடுத்து, இரு வழக்கறிஞர்கள் குழுவினர் நேற்று வேங்கைவயல், இறையூர் ஆகிய கிராமங்களுக்கு சென்று இரு தரப்பினரிடமும் விசாரணை செய்தனர். தொடர்ந்து, விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் இன்று (ஜன.6) தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT