Published : 06 Jan 2023 02:34 PM
Last Updated : 06 Jan 2023 02:34 PM
கும்பகோணம்: திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை கடைத்தெருவில், கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் போராட்டக் குழு சார்பில் கும்பகோணத்தை தலைமையிடமாக்க கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி கையில் அஞ்சல் அட்டை ஏந்தி நூதன போராட்டம் இன்று நடைபெற்றது.
கும்பகோணம் சோழர் காலத்துத் தலைநகரமாகவும், கோயில்களின் நகரமாகத் திகழ்ந்து வருகிறது. இந்த ஊர் கடந்த 1868-ம் ஆண்டு கும்பகோணம் ஜில்லாவாக இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன. பல்வேறு சிறப்புகள் கொண்ட கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் எனக் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
2021 சட்டப்பேரவை தேர்தலின் போது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் கும்பகோணத்தைத் தலைமையிடமாக்க கொண்டு தனி மாவட்டமாக அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். அதை ஏற்றுக் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய 3 தொகுதி திமுக கூட்டணியினரை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஆனால், திமுக பொறுப்பேற்று 600 நாட்கள் கடந்துள்ள நிலையில், வரும் 9-ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருவாய் மானியக் கோரிக்கை அல்லது 110 விதியின் கீழ் புதிய மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை கடைத்தெருவில், கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் போராட்டக் குழு சார்பில் முதல்வருக்கு நினைவூட்டும் வகையில் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் இன்று நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளரும், ஆடுதுறை பேரூராட்சித் தலைவருமான ம.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் கே.எஸ்.சேகர், குடந்தை அரசன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்க மிட்டனர். பின்னர், அவர்கள் ஊர்வலமாகத் தபால் நிலையம் சென்று, அஞ்சல் அட்டையைத் தமிழக முதல்வருக்கு அனுப்புவதற்காகப் பெட்டியில் போட்டனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 3-ம் தேதி தமிழக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT