Published : 06 Jan 2023 01:54 PM
Last Updated : 06 Jan 2023 01:54 PM

உயர் நீதிமன்ற பரிந்துரைப்படி மது விற்பனையை 6 மணி நேரமாக குறைப்பீர்: ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் | கோப்புப் படம்

சென்னை: “சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்தவாறு தமிழகத்தில் மது விற்பனையை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும். அது தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த நல்ல தொடக்கமாக அமைய வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் அரசு மதுக்கடைகளின் மது விற்பனை நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும். மது அருந்துவதற்கு உரிமம் பெறும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு பரந்துரை வழங்கியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் எதிர்ப்பார்ப்புக்கு இது குறைவு தான் என்றாலும், முழு மதுவிலக்கை ஏற்படுத்துவதற்கு நல்ல தொடக்கமாக இருக்கும் என்ற அடிப்படையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்.

மது விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்குகள் மீது நீதியரசர்கள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த யோசனைகளை வழங்கியிருக்கிறது. மருத்துவப் பயன்பாட்டுக்காக மட்டுமே மது பயன்படுத்தப்பட வேண்டும். மற்ற பயன்பாடுகளுக்கு மது தடை செய்யப்பட வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டும் விதியான 47-ஆவது பிரிவில் கூறப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதிகள், மதுப் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்தும், மது புட்டிகளில் பொறிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை வாசகங்களை எவரும் மதிக்காதது குறித்தும் கவலை தெரிவித்துள்ளனர்.

மதுவால் சமூகம் சீரழிவது குறித்த நீதிபதிகளின் கவலையும், அக்கறையும் பாராட்டத்தக்கவை. அதே உணர்வும், சமூகத்தின் மீதான அக்கறையும் ஆட்சியாளர்களுக்கும் இருக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். மது கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் ஊடுருவியிருக்கிறது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பேருந்தில் மக்கள் மத்தியில் மது அருந்தி செல்லும் காட்சிகள் வாடிக்கையாகி விட்டன.

பள்ளிக்கூடங்களில் மாணவிகள் மது அருந்தி மயங்கி விழும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன. நகர்ப்புற பகுதிகளில் ஒரு மாணவர் அவரது பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும் என்றால், அதற்குள்ளாக அவர் 3 மதுக்கடைகளை கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. தெருவுக்குத் தெரு மதுக்கடைகள் திறக்கப்பட்டு எந்த சிரமுமின்றி, தாராளமாக மது கிடைப்பது தான் சிறுவர்கள் வரை மதுப்பழக்கத்திற்கு அடிமையாவதற்கு காரணம் ஆகும்.

மதுக்கடைகளில் 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது. அதுகுறித்த அறிவிப்பு பலகை மதுக்கடைகளின் முகப்பில் வைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், எந்தக் கடையிலும் அத்தகைய அறிவிப்பு பலகைகள் இன்றைய நிலையில் வைக்கப்படவில்லை. 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு தடையின்றி மது விற்பனை செய்யப்படுகிறது.

மதுக்கடைகளில் மது விற்பனை நண்பகல் 12 மணிக்கு தொடங்குவதால் பலர் மது அருந்திவிட்டு பணிக்கு செல்வதில்லை. அதேபோல், இரவு 10 மணி வரை மதுக்கடைகள் திறந்திருப்பதால் இரவு நேரங்களில் சாலை விபத்துகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்திருப்பதைப் போன்று, பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மது விற்பனை நேரத்தை குறைத்தால் மதுவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். இரவு நேரங்களில் சாலை விபத்துகளும் குறையும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை ஒரு சொட்டு மது கூட இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் நிலைப்பாடு ஆகும். அதற்காகத் தான் கடந்த 42 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நான் போராடி வருகிறேன். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படும் போதெல்லாம், 2021 தேர்தலில் அது குறித்த வாக்குறுதியை திமுக அளிக்கவில்லை என்று கூறி அரசு நழுவிக்கொள்கிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் அத்தகைய வாக்குறுதியை திமுக அளிக்கவில்லை என்றாலும் கூட, முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் முதன்முறையாக தில்லி சென்று பிரதமரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப் படும் என்று உறுதியளித்தார். மதுவிலக்கை தமிழக அரசு ஏற்றுக்கொள்கிறது என்பது தான் அதன் பொருள். எனவே, சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்தவாறு தமிழகத்தில் மது விற்பனையை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும். அது தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த நல்ல தொடக்கமாக அமைய வேண்டும்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x