Published : 06 Jan 2023 08:14 AM
Last Updated : 06 Jan 2023 08:14 AM
சென்னை: பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செவிலியர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது கர்ப்பிணி உட்பட 3 செவிலியர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக ஆதரவு
இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் செவிலியர்கள் ஈடுபட்டனர். இதில் 500-க்கும்மேற்பட்ட செவிலியர்கள் தங்களதுகுழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.
செவிலியர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினர், தன்னார்வலர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அதிமுக சார்பில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது. எம்ஆர்பி தேர்வில் முறையாகத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சமூக இட ஒதுக்கீட்டைப் பின்பற்றிதான் செவிலியர் பணி நியமனம் வழங்கப்பட்டது. இரண்டரை ஆண்டுகளாக வேலை வாங்கிவிட்டு இப்போது பணியிலிருந்து அவர்களை நீக்கியிருப்பது சரியா?
மேலும், ஒப்பந்த செவிலியர்களுக்கு கடந்த 6 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை என்பது வேதனை அளிக்கிறது. அதிமுகஆட்சியில் ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி போராடிய கனிமொழி, இப்போது என்ன சொல்லப் போகிறார்? இவ்வாறு அவர் பேசினார்.
சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது,‘‘9-ம் தேதி தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பணி நீக்கப்பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி அமர்த்தக் கோரி அதிமுக தரப்பில் குரல் எழுப்பப்படும். குறிப்பாக பணி நீக்கப்பட்ட செவிலியர்கள் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி பேரவையில் குரல் எழுப்புவார்’’ என்றார்.
இதற்கிடையே, உண்ணாவிரதப் போராட்டத்தின்போது கர்ப்பிணி உட்பட 3 செவிலியர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதில் 2 பேர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றொருவருக்கு ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், போராட்டக் களத்திலேயே அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் வந்ததும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT