Published : 06 Jan 2023 07:59 AM
Last Updated : 06 Jan 2023 07:59 AM

ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிப்பதாக குற்றச்சாட்டு: ஆளுநரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

ஆர்.என்.ரவி | கோப்புப்படம்

சென்னை: ஆரோவில் அறக்கட்டளைத் தலைவராக ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிப்பதால் தமிழக ஆளுநரை தகுதி நீக்கம் செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு, விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி உயர் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது.

இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் கண்ணதாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். ஆளுநராக இருப்பவர் இவ்வாறு ஆதாயம் தரும் இரட்டைப் பதவிகளை வகிக்கக் கூடாது.

இரட்டை ஆதாயம்

ஆரோவில் அறக்கட்டளையின் சட்டப்படி, தலைவர் பதவி வகிப்பவருக்கு ஊதியம், படி, ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்கப்படும். தமிழக ஆளுநராக பதவி வகிப்பதால் அதற்கான ஆதாயமும் ஆர்.என்.ரவிக்கு கிடைக்கும். இந்திய அரசியலமைப்பு சாசனப் பிரிவு 158(2) பிரகாரம் ஆளுநராகப் பதவிவகிப்பவர், இவ்வாறு ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிக்க முடியாது. ஆரோவில் அறக்கட்டளைத் தலைவராக பதவி வகிக்கும் ஆர்.என்.ரவி, தமிழக ஆளுநராக பதவியில் நீடிக்க முடியாது. எனவே அவரை ஆளுநர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்'' என கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் எம்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆகியோர் ஆஜராகி, "ஆளுநருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என அரசியல் சாசனம், சட்ட ரீதியாகப் பாதுகாப்பு வழங்கியிருந்தாலும், அது ஆளுநர் என்ற பதவியின் செயல்பாடுகளுடன் தொடர்புடையது. தனிப்பட்ட முறையில் அவரது செயல்பாடுகள் தொடர்பாக வழக்குத் தொடர முடியும். ஆளுநர் இரட்டைப் பதவி வகிப்பதால், சட்ட விதிகளுக்கு முரணாக அவர் பதவியில் நீடிப்பதாகக் கருதி அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்'' என வாதிட்டிருந்தனர்.

அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், "உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புகளின்படி, பதவியில் இருக்கும் குடியரசுத் தலைவரோ, ஆளுநர்களோ நீதிமன்றங்களுக்கு பதிலளிக்கக் கட்டுப்பட்டவர்கள் இல்லை. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல’’ எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x