Published : 06 Jan 2023 08:22 AM
Last Updated : 06 Jan 2023 08:22 AM
சென்னை: தமிழக பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களை நடத்த ஆளுநர் மாளிகை விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கை:
நடப்பாண்டில் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் தவிர வேறு எந்த பல்கலைக்கழகத்திலும் இதுவரை பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை. இதனால் ஏராளமான மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளும், வேலைவாய்ப்புகளும் கைநழுவும் ஆபத்து உள்ளது.
பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களுக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து இன்னும் அனுமதி அளிக்கப்படாததுதான் தாமதத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், கோவை வேளாண் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் டிச.19-ம் தேதி, தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகையில் சந்தித்து, பட்டமளிப்பு விழா நடத்த அனுமதி கேட்டதாகவும், ஆனால், இதுவரை அவர்களுக்கு பதில் கிடைக்கவில்லை என்றும் வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன. அதேநேரத்தில், காரணம் எதுவாக இருந்தாலும், பட்டமளிப்பு விழாக்களை தாமதப்படுத்துவது நியாயமானதாக இருக்காது.
எனவே, மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசுக்குச் சொந்தமான பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்களை விரைந்து நடத்துவதற்கு ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்மூலம் மாணவர்களின் நலன்களை காக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT