Published : 06 Jan 2023 06:31 AM
Last Updated : 06 Jan 2023 06:31 AM
சென்னை: திராவிட ஆட்சி குறித்து ஆளுநர் விமர்சனம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, இந்தியாவின் ஒற்றுமை உணர்வுக்கு எதிரான மதவாத அரசியலை கண்டிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, “நாடு சுதந்திரம் பெற்றபோது பல்வேறு பிரிவினைகள் இருந்தன. ஆனால், தற்போது நம் நாடு பாரதம் என்ற பார்வையில் ஒரே குடும்பமாக உணரப்படுகிறது. தமிழகம் என்பது நாட்டின் ஆன்மா, ஒரு அடையாளம்.
புனைகதைகள், எதிர்மறை அணுகுமுறைகளை அழித்துவிட்டு தமிழகத்தை அப்படியே வைத்திருக்க வேண்டும். இங்கு அனைத்து மக்களுக்கும் பயன் அளிக்கும் கல்வி உள்ளிட்ட விஷயங்களை தங்களின் சொந்த காரணங்களுக்காக மறுக்கும் அரசியல் சூழல் உள்ளது. மேலும், இந்தியாவின் ஒரு பாகம் தமிழகம் என்பதை அவர்கள் மறுக்கின்றனர். திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்” என்றார்.
இந்நிலையில், இதற்கு பதிலளித்து, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் பிரிவினை, மோதல், குழப்பம், கொந்தளிப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், சர்ச்சைக்குரிய கருத்துகளை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டு வருகிறார். எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், சனாதனம், ஆரியம், திராவிடம், திருக்குறள் உள்ளிட்டவை குறித்து அவர் பேசும் கருத்துகள் அபத்தமானதாகவும், ஆபத்தானதாகவும் உள்ளன.
இப்போது வெளிப்படையாக தேர்தல் அரசியல்வாதியாகப் பேசத் தொடங்கிவிட்டார். திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என, பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பேச வேண்டியதை, ஆளுநர் மாளிகையில் அவர் பேசுவது கடும் கண்டனத்துக்குரியது.
அவருக்கு தமிழக பாஜக தலைவராகும் ஆசை இருந்தால், ஆளுநர் பதவியை விட்டுவிட்டு, பேசட்டும். திராவிட ஆட்சி குறித்த அவரது விமர்சனம் பாஜகவின் தேர்தல் அரசியல் உள்நோக்கத்தை காட்டுகிறது. தமிழகத்தின் வளர்ச்சியை மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் தமிழகத்தின் பங்கு 9.22 சதவீதம், மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழகத்தின் பங்கு 6 சதவீதம், நாட்டின் மொத்த ஏற்றுமதியில் தமிழக பங்களிப்பு 8.4 சதவீதம், ஜவுளி ஏற்றுமதியில் 19.4 சதவீதம், கார்கள் ஏற்றுமதியில் 32.5 சதவீதம், கல்வியில் 2-வது இடம், தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதில் 3-வது இடம் என மத்திய அரசு பாராட்டியுள்ளது.
திராவிட மாடலின் இந்த வெற்றி, சில அரசியல் சக்திகளுக்கு எரிச்சலைத் தரலாம். அதில் ஒருவராக ஆளுநர் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
‘திராவிடக் கட்சிகள் பிரிவினையை வளர்த்தது’ என்கிறார். காலம் காலமாக பிறப்பின் பேரால், மதத்தின் பேரால், சாதியின் பேரால் இருக்கும் பிரிவினையை அகற்றப் பிறந்ததே திராவிட இயக்கம். தமிழர்களை இன உணர்வு பெற்றவர்களாக மாற்றியதும், கல்வியில், வேலையில் முன்னுக்குக் கொண்டு வந்ததும் திராவிட இயக்கம்தான்.
இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வுக்கு எதிரான மதவாத அரசியலை ஆளுநரால் கண்டிக்க முடியுமா அவருக்கு தமிழகம் - தமிழன் - தமிழ் ஆகிய மூன்றையும் பிடிக்கவில்லை. இவற்றைவிட்டு விலகிச் செல்லும் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும்.
ஆளுநராக இருந்து கொண்டு மாநில பாஜக தலைவராக செயல்படாமல், அரசியல் சட்டப்படி பணியாற்றுவதே அவருக்கு சிறந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT