Published : 06 Jan 2023 06:26 AM
Last Updated : 06 Jan 2023 06:26 AM

அமைச்சரவை முடிவுக்கு எதிராக செயல்படும் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய போராடும் நிலை ஏற்படும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டு, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். ஆனால், பாஜகவில் இருந்து வெளியேறிய நடிகை காயத்ரி ரகுராம், அண்ணாமலை தலைமையில் உள்ள பாஜகவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

பெண் காவலர்களுக்கு தொல்லை கொடுத்ததாக புகார் வந்தவுடனே, இரு திமுகவினர் உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதைப் பாராட்ட மனமில்லாத அண்ணாமலை, பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்கிறார்.

பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் தலித்துகள், ஆதிவாசிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

பாஜக ஆளும் மாநிலங்களில் தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகக் கூறுவது அப்பட்டமான அவதூறாகும்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக பாஜக நிர்வாகியாக செயல்பட்டு, வரலாற்றுத் திரிபு வாதங்களை தொடர்ந்து பேசி வருகிறார். தமிழக அரசுக்கு எதிராகவும், அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அதிகாரங்களை மீறும் வகையிலும், தமிழக அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் ஆளுநரை உடனடியாக ஆளுநர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, அனைத்து ஜனநாயக, மதச்சார்பற்ற கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட வேண்டிய நிலை ஏற்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x