Published : 05 Jan 2023 07:37 PM
Last Updated : 05 Jan 2023 07:37 PM

நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்: மதுரை ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ ஜியோ வலியுறுத்தல்

மதுரையில் இன்று மாலை ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடந்த மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: நிலுவை கோரிக்கைகளை வரும் சட்டமன்றத் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

மதுரையில் இன்று ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.செல்வம் நிறைவுரையில் பேசியது: “ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தமிழக முதல்வர், தேர்தலின்போது வாக்குறுதியாகவும், ஜாக்டோ ஜியோ மாநாட்டில் பங்கேற்று ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கையான புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும். 2 ஆண்டாக முடக்கப்பட்ட சரண்டர் உடனடியாக வழங்கப்படும். புதிய ஆண்டில் அறிவித்துள்ள அகவிலைப்படி 1.7.2022 முதல் அறிவிக்கப்பட வேண்டும்.

ஆனால் 1.1.2023 முதல் அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்றாலும், இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் 20 மாத ஆட்சியில் 18 மாதங்கள் அகவிலைப்படி முடக்கப்பட்டிருப்பதை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். நியாயமான கோரிக்கையான பழைய ஓய்வூதியத்திட்டத்தை கொண்டுவரவேண்டும்.

முடக்கப்பட்ட சரண்டரை உடனே வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்ட மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் 6 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதில் வரையறுக்கப்பட்ட ஊதியத்தில் ஊழியர்கள் நியமிக்க வேண்டும். மறுசீரமைப்பு என்ற பெயரில் 115, 139, 152 அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்.

இடைநிலை ஆசிரியர், முதுநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு 41 மாதத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும். கடந்த 2ம்தேதி தமிழக முதல்வர் எங்களை அழைத்துப்பேசி நிதி நிலைமை சரியானவுடன் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என கூறினார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நிலுவைக் கோரிக்கைகளை வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x