Published : 05 Jan 2023 06:59 PM
Last Updated : 05 Jan 2023 06:59 PM
புதுச்சேரி: உதவியாளர் பணியிடங்களை நேரடியாக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்தும், நூறு சதவீதம் பதவி உயர்வு அடிப்படையில் நியமிக்கக் கோரி ஒரு நாள் விடுப்பு எடுத்து தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு அமைச்சக ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி அரசு துறைகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமைச்சக ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். புதுவை அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். உதவியாளர் பணியிடங்களை நேரடியாக நிரப்பக்கூடாது என அமைச்சக ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதுவை அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அமைச்சக ஊழியர்களுக்கு பதவி உயர்வு மூலம் உதவியாளர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் உதவியாளர் பணியிட அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. அதேநேரத்தில் பதவி உயர்வு மூலம் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அமைச்சக ஊழியர்கள் விடுப்பு எடுத்து தலைமை செயலகம் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அவர் கூறுகையில், "உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. நேரடி நியமனம் இல்லாமல் 100 சதவீதம் பதவி உயர்வு மூலம் உதவியாளர் பணியிடங்களை நிரப்பினால் அதனால் ஏற்படும் மேல்நிலை எழுத்தர் பணியிடங்களை நேரடியாக நியமிக்கலாம். பல கட்டமாக வலியுறுத்தியும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே முதல்கட்டமாக ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தியுள்ளோம். தேவைப்பட்டால்போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT