Published : 05 Jan 2023 05:59 PM
Last Updated : 05 Jan 2023 05:59 PM
மதுரை: மதுரை மாவட்டத்தில் நடைபெறும் உலக புகழ் பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிகட்டுப் போட்டிகளை பார்க்க சிறப்பு இருக்கை ஏற்பாடு வசதிகள் செய்யப்படுமா என தமிழக அரசிடம் மாற்றுத் திறனாளிகள் எதிர்பார்க்கின்றனர். அவர்கள் இன்று மதுரை ஆட்சியரை சந்தித்து இதுதொடர்பாக முறையிட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை உள்ளூர் பார்வையாளர்கள் முதல் உலக சுற்றுலாப் பயணிகள் வரை வியந்து பார்த்து செல்கின்றனர். இந்த போட்டிகளில் வாடிவாசலில் அவிழ்த்துவிடப்படும் ஆக்ரோஷமாக சீறி பாயும் காளைகளை வீரம் நிறைந்த மாடுபிடி வீரர்கள் அடக்க முயற்சிப்பார்கள். வாடிவாசல் முன் நடக்கும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கும் வீரர் வெற்றிப்பெற்றதாகவும், வீரர்களிடம் பிடிப்படாத காளைகள் வெற்றிப்பெற்றதாகவும் அறிவிக்கப்படுவார்கள். காளைகளுக்கு போட்டியில் பங்கேற்றாலே 5-க்கும் மேற்பட்ட நிச்சயப்பரிசுகளும், வெற்றிப் பெற்றதற்கான சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.
போட்டிக்கும் முன் காளைகள் ஆக்ரோஷமாக காணப்படும் என்பதால் வாடிவாசல் பின்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதுபோல், வாடிவாசலில் இருந்து வீரர்களிடம் இருந்து தப்பி வரும் காளைகளை அதன் உரிமையாளர்கள் சேகரிக்கும் பகுதியிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பெரும்பாலும், இதுபோன்ற இடங்களில் பார்வையாளர்கள் போலீஸார், போட்டி ஏற்பாட்டாளர்கள் ஏமாற்றி அத்துமீறி செல்லும்போது ஆக்ரோஷமாக வரும் காளைகள் முட்டி படுகாயம், உயிரிழப்பு சம்பவங்கள் நடக்கிறது.
ஜல்லிக்கட்டு நடக்கும் கிராமங்களில் மாற்றுத் திறனாளிகள் வருவதில்லை. பொங்கல் பண்டிகை நாட்களில் வீரமும், ஆக்ரோஷமும் நிறைந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளை மற்றவர்களை போல் தாங்கள் பார்த்து ரசிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் மாற்றுத் திறனாளிகள் மத்தியில் நீண்ட நாளாக உள்ளது. அந்தக் குறையை போக்க இந்த ஆண்டு நடக்கும் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப்போட்டிகளை நேரில் பார்வையிடுவதற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்து தருமாறு மாற்றுத் திறனாளிகள் மாவட்ட நிர்வாகத்திடம் எதிர்பார்க்கின்றனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் 10-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து அந்த சங்கத்தை சேர்ந்த குமரவேல் கூறுகையில், ‘‘மதுரை மாவட்டத்தில் 50 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. தமிழகத்தில் நடக்கும் பிற அனைத்து வகை போட்டிகளிலும் அதனை கண்டுகளிக்கும் வகையில் விளையாட்டு துறை சிறப்பு வசதிகளை மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த அரசு செய்து கொடுக்கிறது. அந்த அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் இடங்களில் நடைபெறும் ஜல்லிகட்டுப் போட்டிகளை பார்க்க மாவட்ட நிர்வாகம் சிறப்பு இருக்கை வசதிகள், ஏற்பாடுகள் செய்து தர வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment