Published : 05 Jan 2023 05:51 PM
Last Updated : 05 Jan 2023 05:51 PM
திருப்பூர்: “வரும் 9-ம் தேதி தமிழக சட்டப் பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தாய்மொழியை மத்திய அரசின் ஆட்சி மொழியாக்க சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று மதிமுக மாநில அவைத்தலைவர் சு.துரைசாமி வலியுறுத்தினார்.
மதிமுகவின் மாநில அவைத்தலைவர் சு.துரைசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ''மத்திய பாஜக அரசு இந்தியைத் திணிக்க இன்று பெருமுயற்சி எடுத்து வருகிறது. ஆங்கிலம் என்பது வெள்ளைக்காரர்களின் மொழி என மக்களால், சுதந்திர கால கட்டத்தில் கருதப்பட்டது. ஆங்கிலேயரை எதிர்ப்பதால், இயல்பாகவே அவர்களது மொழியையும் எதிர்த்தனர். தமிழகத்துக்கு வந்த அமித் ஷா, தமிழ் மீது பெரிய பற்றும், பாசமும் இருப்பதாக பாசாங்கு காட்டும் வேளையில், தமிழக அரசும் தாய்மொழியில் மருத்துவத்தையும், பொறியியல்துறை கல்விகளை கொண்டுவர வேண்டும் என்கிறார்.
ஆனால் அவரின் உள்நோக்கம், தமிழில் மருத்துவமும், பொறியியலும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தமிழகத்தை விட்டு வெளியே சென்று தொழில் செய்ய முடியாது. ஆனால் இந்தி படித்திருக்கக் கூடியவர்கள், இந்தி மட்டும் படித்தவர்கள் உலக நாடுகளுக்கு செல்ல முடியாது. ஆங்கிலம் என்பது என்பது இன்றைக்கு உலக மொழி. ஆங்கிலத்தை தவிர்த்துவிட்டு, முன்னேறுவதற்கான வாய்ப்பு என்பது குறைவு. ஆங்கிலத்தை அகற்றிவிட்டு அந்த இடத்துக்கு இந்தியைக் கொண்டுவருவோம் என்று சொல்லும் மத்திய அரசாங்கம், எதற்காக குஜராத்திலும், பிஹாரிலும், மத்தியப் பிரதேசத்திலும் ஆங்கிலம் ஏன் கட்டாய பாடமாக வைத்துள்ளனர்.
மோடி, அமித் ஷாவின் கூற்றுப்படி, குஜராத்தில் ஆங்கிலத்தை அகற்றிவிட்டு குஜராத்தி, இந்தி மொழி, சமஸ்கிருத மொழியை சொல்லித் தரலாமே. ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்கம், ஒடிசா, கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப், கேரளம், தமிழகம், காஷ்மீர் உட்பட 11 மாநிலங்கள் இந்தி பேசாத மாநிலங்கள் உள்ளன. இந்த சட்டப்பேரவைகளில் தங்கள் தாய்மொழியை மத்திய அரசின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினால், அதை எதிர்க்க அந்தந்த மாநிலங்களில் உள்ள பாஜகவால் முடியாது.
ஒருவேளை எதிர்த்தால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை மாநில மக்கள் புறக்கணிப்பார்கள். நாட்டில் பிஹார், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மட்டுமே இந்தி பேசுகின்றன. 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து பிரிவு பள்ளிகளிலும், அந்தந்த மாநில மொழிகள் கட்டாய பாடமாக இருக்க வேண்டும். தமிழக சட்டப் பேரவையில் இந்திய அரசாங்கத்தின் ஆட்சி மொழியாக, தமிழை சேர்க்க வேண்டும் என தீர்மானம் போட்டு, மத்திய அரசாங்கத்துக்கு நிர்பந்தம் ஏற்படுத்த வேண்டும்.
மாநில மொழிகளின் மொழி உணர்வுக்கு எதிராக செயல்பட்டால், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு கடும் தோல்வியை சந்திக்க நேரிடும். வரும் 9-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கான முன்னெடுப்பை தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
தமிழக ஆளுநர் வரம்பு மீறி செயல்படுகிறார். அண்ணாமலை போன்றவர்கள் பக்குவமற்ற நிலையில் உள்ளனர். அரசியலில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதது. மதிமுகவின் எதிர்காலம் அதன் நடவடிக்கைகளை பொறுத்தே அமையும்'' என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...