Published : 05 Jan 2023 04:54 PM
Last Updated : 05 Jan 2023 04:54 PM
சென்னையில் உள்ள சாலைப் பள்ளங்களில் சிக்கி மரணங்கள் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது. மிக சமீபத்தில் மதுரவாயல் அருகே சாலையில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்து, லாரியின் கீழ் சிக்கி இளம்பெண் ஒருவர் மரணம் அடைந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் மதுரவாயல் - இரும்புலியூர் புறவழிச்சாலையின், சர்வீஸ் சாலை மருத்துவர் கரோலின் பிரிசில்லா (50), அவரது மகள் எஸ்வின் 2 பேரும் ஸ்கூட்டரில் சென்றபோது விபத்தில் சிக்கி மரணம் அடைந்தனர். இதுபோன்று சென்னை சாலைகளில் உள்ள பள்ளங்களில் சிக்கி மரணங்கள் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது.
மரணங்கள்: தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டில் சாலை உள்ள பள்ளங்களால் சென்னை, கோவை, திருச்சி மாநகரங்களில் ஒரு விபத்து கூட நடைபெறவில்லை என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மதுரையில் மட்டும் சாலை பள்ளங்களால் நிகழ்ந்த 20 விபத்துகளில் 4 பேர் மரணம் அடைந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர்.
கை காட்டும் துறைகள்: ஒவ்வொரு முறையும் இதுபோன்ற விபத்துகள் ஏற்படும்போது சம்பந்தப்பட்ட சாலை யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை அந்தத் துறைகள் தெரிவிக்கவே பல நாட்கள் ஆகும். சென்னை மாநகராட்சி ‘இந்த சாலை மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் வரும்’ என்று தெரிவிக்கும். மாநில நெடுஞ்சாலைத் துறை ‘இந்த சாலை தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் வரும்’ தெரிவிக்கும். இவ்வாறு ஒவ்வொரு துறையும் மற்ற துறையை கை காட்டும் பணியைத் தான் செய்வார்கள்.
சாலைகள்: சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சென்னை மாநகராட்சி 387 கி.மீ பேருந்து தட சாலைகளையும், 5623 கி.மீ நீளத்திற்கு உட்புற சாலைகளையும் பராமரித்து வருகிறது. மாநில நெடுஞ்சாலைத் துறை சென்னையில் 16 நெடுஞ்சாலைகளில் 186 கி.மீ சாலையை பராமரித்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட ஒரு சில நெடுஞ்சாலைகளை பராமரித்து வருகிறது.
விபத்து ஏற்பட காரணம்: சென்னை மாநகராட்சி தனது கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளையும், மாநில நெடுஞ்சாலை மற்றும் மத்திய நெடுஞ்சாலைத் துறைகள் அதன் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் மட்டுமே பராமரிப்பு பணிகளை மேற்கோள்வார்கள். சென்னையில் சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தால் பொதுமக்கள் பெரும்பாலும் மாநகராட்சியிடம்தான் புகார் அளிப்பார்கள். இதற்கு மாநகராட்சி, ‘இந்த சாலை எங்களது கட்டுப்பாட்டில் இல்லை’ என்று தெரிவித்துவிடுவார்கள். இதன் காரணமாக புறநகர் பகுதிகளில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இல்லாத பல சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
153 விபத்துகள்: இளம்பெண் பலியான சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரம் முதல் புழல் வரை உள்ள சாலை 32 கி.மீ நீளம் கொண்டது. இந்த சாலைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.100 கோடி சுங்கக் கட்டணமாக கிடைக்கிறது. இந்த சாலையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை நடந்த விபத்துகளில் 153 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
ஒரே துறையின் கீழ்: இது குறித்து நகர்ப்புற வளர்ச்சி வல்லுநர்களிடம் கேட்டபோது, "பெருநகரங்களை பொறுத்தவரையில் அந்த நகரங்களின் மொத்த கட்டுப்பாடும் ஒரு அமைப்பிடம்தான் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் நிர்வாகம் சிறப்பாக செயல்பட முடியும். சென்னையை பொறுத்தவரையில் சென்னையில் உள்ள அனைத்து சாலைகளும், மாநகராட்சி கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இல்லை என்றால் இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்ந்துகொண்டே தான் இருக்கும். விபத்துகளும் நடந்து கொண்டுதான் இருக்கும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT