Published : 05 Jan 2023 03:10 PM
Last Updated : 05 Jan 2023 03:10 PM

ஒப்பந்த செவிலியர்கள் பிரச்சினை | திமுக அரசு செய்வது பழிவாங்கல் நடவடிக்கை: விஜயபாஸ்கர் காட்டம்

வள்ளுவர் கோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: "வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி அதிமுக சார்பில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நூறு சதவீதம் சிறப்பு கவனம் ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வர இருக்கிறார்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் தங்களை பணி நீக்கம் செய்ததைத் திரும்பப்பெறவும், பணி நிரந்தரம் செய்யக் கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், வியாழக்கிழமை (ஜன.5) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அதிமுக சார்பில் ஆதரவு தெரிவித்து முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போராட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "8500 பேருக்கு அழைப்பாணை அனுப்பி, வெறும் 2400 பேர்தான், அதாவது 30 சதவீதம் பேர்தான் பணியில் சேர்ந்துள்ளனர்.

இந்தப் பணியில் சேர்ந்து இரவு பகல் பாராமல், குழந்தைகளை வைத்துக்கொண்டு, வெளி மாவட்டங்களில் கிடைத்த இடங்களில் தங்கி, உணவை சாப்பிட்டுவிட்டு கரோனா காலத்தில் பணியாற்றியவர்கள் இவர்கள். இவர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு இவ்வளவு யோசிப்பதற்கு காரணம் என்ன?

நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஒப்பந்த செவிலியர்களை பணி நியமனம் செய்ய வலியுறுத்தி அதிமுக சார்பில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நூறு சதவீதம் சிறப்பு கவனம் ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வர இருக்கிறார்.

மேலும், அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஒரே காரணத்திற்காக ஏன் இவர்களை இந்த அரசு பழிவாங்குகிறது என்று கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் மிகுந்த கவலையுடன் இருக்கிறார்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x