Published : 05 Jan 2023 04:04 AM
Last Updated : 05 Jan 2023 04:04 AM

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டாரா? - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

புதுடெல்லி: அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக, கட்சி உறுப்பினர்களால் தேர்தல் மூலமாக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டாரா என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இது தொடர்பான விசாரணை ஜன. 5-ம் தேதி (இன்று) நடைபெறும் என்று தெரிவித்தனர்.

கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளரான வைரமுத்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதில் இறுதி முடிவு எட்டும்வரை அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்தக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம், ‘‘இந்த வழக்கு விசாரணையால் கட்சிப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘இடைக்காலப் பொதுச் செயலாளராக, கட்சி உறுப்பினர்களால் தேர்தல் மூலமாக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டாரா?’’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு இபிஎஸ் தரப்பில், ‘‘5-ல் ஒரு பங்கு உறுப்பினர்களின் கோரிக்கைபடி பொதுக்குழு கூடி, அதில் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக பழனிசாமி பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்’’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஓபிஎஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், ‘‘அதிமுக விதிகளின்படி அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க முடியுமே தவிர, பொதுக்குழு உறுப்பினர்களால் அல்ல. அதிமுக கட்சி விதிகளின்படி இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற பதவியே இல்லை. தேர்தல் ஆணையம்கூட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில்தான் சமீபத்தில் தேர்தல் தொடர்பான ஆவணங்களை அனுப்பியுள்ளது. ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு, கட்சி விதிகளின்படி நடைபெறவில்லை என்பதால் அது செல்லாது. ஜூலை 11-ம் தேதிக்கு முன்பாக என்ன நிலை இருந்ததோ, அதே நிலை நீடிக்க வேண்டும்’’ என்றார்.

அப்போது நீதிபதிகள், ‘‘அப்படியென்றால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட னவா?’’ என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஓபிஎஸ் தரப்பில், ‘‘இந்த இரு பதவிகளுக்கும் கட்சியில் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பதால், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் நேரடியாக, ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். அது முறைப்படி நடந்த தேர்தல்’’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘அதிமுக ஒருங்கிணைப்பாளர்களிடையே, ஒருங்கிணைப்பு இல்லை’’ என்று கருத்து தெரிவித்தனர்.

அப்போது இபிஎஸ் தரப்பில், ‘‘ஓபிஎஸ் திமுகவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்’’ என்று குற்றம்சாட்டப்பட்டது. அதற்கு நீதிபதிகள், ‘‘ஓபிஎஸ் செயல்பாடு எப்படி உள்ளது என்பதைப் பற்றி இந்த நீதிமன்றம் கருத்தில்கொள்ள வேண்டியதில்லை. அதற்கான தேவையும் இல்லை. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கவே வாதங்கள் கேட்கப்படுகின்றன. எனவே, இரு தரப்பும் இந்த வழக்கு தொடர்பான உத்தரவு மற்றும் வாத விவரங்களை சுருக்கமாக, தொகுப்பாக தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று கூறி, விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

பின்னர் மீண்டும் விசாரணை தொடங்கியபோது, ஆவணங்கள் அனைத்தும் தமிழில் உள்ளதாலும், அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும்போது பிழைகள் ஏற்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த வழக்கு விசாரணையை இந்த வாரத்துக்குள் முடிக்க விரும்புகிறோம். நாளை (இன்று) மாலை கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கினால், அதற்குள் வாதங்களை முடிக்க முடியுமா?’’ என்றனர்.

அதற்கு ஓபிஎஸ் தரப்பில் ‘‘மொத்தமாக 2 மணி நேரம் ஒதுக்க வேண்டும்’’ என்றும், இபிஎஸ் தரப்பில் ‘‘ஒன்றரை மணி நேரம் ஒதுக்க வேண்டும்’’ என்றும் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை இன்று (ஜன. 5) பிற்பகல் 2 மணிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x