Published : 04 Jan 2023 08:08 PM
Last Updated : 04 Jan 2023 08:08 PM
புதுடெல்லி: சென்னை - சேலம் எட்டு வழி சாலை விவகாரத்தில் தமிழக முதல்வர் கொள்கை முடிவை எடுப்பார் என்று தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ வேலு கூறியுள்ளார்.
தமிழகம் சார்ந்த கோரிக்கையுடன் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை, தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு புதன்கிழமை (ஜன.4) டெல்லியில் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் பல்வேறு நிலைகளில் தாமதமாக செயல்பட்டு வருகிறது. அவற்றை விரைவுபடுத்த வேண்டும். தாம்பரம்- செங்கல்பட்டு உயர்மட்ட சாலையை விரைவுபடுத்த வேண்டும். செங்கல்பட்டு - திண்டிவனம் சாலையை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தோம். இந்த ஆண்டு அந்தப் பணிகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுனோம்.
கப்பலூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் நகரப் பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அதற்கு மாற்றுவழி விரைவில் ஏற்படுத்தப்படும் எனவும், இதுதொடர்பாக மத்திய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் குழு விரைவில் ஆய்வு செய்யும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி அளித்துள்ளார்" என்று தெரிவித்தார்.
அப்போது சேலம் - சென்னை எட்டு வழி சாலை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "சாலை திட்டங்களை செயல்படுத்தக் கூடாது என திமுக அந்த திட்டத்தை எதிர்க்கவில்லை. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதுகூட சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களான விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றுதான் வலியுறுத்தினோம்.
எனவே, சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை திமுக எதிர்க்கவில்லை என்றும், அதனை மாற்றுப் பாதையில் செயல்படுத்த வேண்டும் என்பதுதான் தங்களின் கருத்து. எனவே இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் கொள்கை முடிவு எடுப்பார்" என்று அவர் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...