Published : 04 Jan 2023 06:11 PM
Last Updated : 04 Jan 2023 06:11 PM

திமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட சரவணன் திடீரென அதிமுகவில் ஐக்கியமானதன் பின்னணி என்ன?

எடப்பாடி பழனிசாமியுடன் சரவணன்

மதுரை: பாஜகவில் சேர்ந்த மறுநாளே வேட்பாளராக்கப்பட்ட டாக்டர் சரவணன் திமுகவில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுகவில் ஐக்கியமான பின்னணி என்ன என்பது குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவர், நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர் மதுரையைச் சேர்ந்த டாக்டர் சரவணன். இவர் திமுகவில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கே.பழனிசாமி முன்னிலையில் தற்போது அதிமுகவில் சேர்ந்துள்ளார். திமுகவில் அவரை சேர்க்க அக்கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், நீண்ட காத்திருப்பிற்கு பின், அதிமுகவில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் மதுரை புறநகர் மாவட்ட மதிமுக செயலாளராக டாக்டர் சரவணன் இருந்தார். மதுரையில் வைகோவை அழைத்து வந்து திமுக, அதிமுகவிற்கு இணையாக நிகழ்ச்சிகளை நடத்தி காட்டி, அக்கட்சியில் கவனம் ஈர்த்தார். அதனால், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் மிக நெருக்கமானார். ஆனால், அக்கட்சியில் ஒரு அளவிற்கு மேல் அரசியல் ரீதியாக வளர முடியாததால் அக்கட்சியில் இருந்து விலகி 2016-ம் ஆண்டு திமுகவில் சேர்ந்தார். திமுகவில் அவருக்கு மருத்துவ அணியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

2017-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் இவர் போட்டியிட 'சீட்' வழங்கப்பட்டது. இந்தத் தேர்தலில் அதிமுகவின் ஏகே போஸ் வெற்றி பெற்றார். ஆனால், அவர் காலமானதால் 2019-ல் இடைத் தேர்தல் நடந்தது. இதில் திமுக சார்பில் போட்டியிட்டு டாக்டர் சரவணன் வெற்றி பெற்றார். திமுகவில் இவரது வளர்ச்சி, அக்கட்சி நிர்வாகிகளுக்கு பிடிக்கவில்லை. அதனால், கடந்த சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் திருப்பரங்குன்றம் தொகுதியில் இவர் போட்டியிடுவதற்கு 'சீட்' கிடைக்காமல் செய்துவிட்டனர்.

அதிருப்தியடைந்த டாக்டர் சரவணன், தேர்தல் நேரத்தில் திடீரென்று பாஜகவில் சேர்ந்தார். முந்தைய நாள் சேர்ந்தவருக்கு அடுத்தநாளே மதுரை வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுவதற்கு 'சீட்' வழங்கப்பட்டது. இது பாஜக நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனாலும், பாஜகவில் போட்டியிட்டு வடக்கு தொகுதியில் இரண்டாம் இடம் பிடித்தார். தேர்தலில் தோல்வியடைந்தாலும் அதிக வாக்குகளை பெற்றதால் மதுரை மாநகர செயலாளர் பதவியை பாஜக சரவணனுக்கு வழங்கியது.

அதன்பிறகு மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் நெருக்கமாக இருந்தார். திமுக, அதிமுகவிற்கு இணையாக பாஜகவில் அதிக கூட்டத்தை திரட்டி ஆர்ப்பாட்டங்கள், கட்சிக் கூட்டங்களை நடத்தி பரபரப்பு அரசியல் செய்து வந்தார். ஆனால், பாஜகவில் இவர் கை காட்டிய நபர்களுக்கு பொறுப்புகள் வழங்காததால் அண்ணாமலையுடன் உரசல் ஏற்பட்டது.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் காஷ்மீரில் இறந்த ராணுவ வீரர் உடல் வந்தபோது அவருக்கு மரியாதை செலுத்த வந்த நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணியை வீசினர். ஏற்கெனவே பாஜகவினருடன் முரண்பாட்டில் இருந்த சரவணன், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஆதரவாக பாஜகவினரின் இந்தச் செயல் பிடிக்கவில்லை என்று கூறி, அக்கட்சியில் இருந்து விலகினார். மேலும், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.

அதனால், திமுகவில் பழனிவேல் தியாகராஜன் மூலம் சேருவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதை உறுதி செய்வது போல் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செல்லும் நிகழ்ச்சிகளுக்கு அவரது ஆதரவாளராக உடன் செல்ல ஆரம்பித்தார். ஆனால், மதுரை மாவட்ட உள்ளூர் திமுக நிர்வாகிகள், சரவணனை மீண்டும் திமுகவில் சேர்க்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையில், தனது மகன் திருமணத்தை மதுரையில் திமுக, அதிமுக இன்னாள் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், நடிகர், நடிகைகளை அழைத்து பிரமாண்டமாக நடத்தினார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இந்த திருமணத்திற்கு வந்திருந்தார். திமுகவில் தொடர்ந்து இவரை கட்சியில் சேர்க்காமல் காக்க வைக்கப்பட்டதால் சரவணன், ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அவரது அதிமுக அணியில் சேர இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் டாக்டர் சரவணன், திடீரென்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் கே.பழனிசாமியை சந்தித்து அக்கட்சியில் சேர்ந்தார்.

இந்த நிகழ்ச்சியில் இபிஎஸ் அணியின் மதுரை மாவட்ட உள்ளூர் அதிகார மையங்கள், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார், முன்னாள் மேயர் விவி.ராஜன் செல்லப்பா பங்கேற்கவில்லை. அதனால், அவர்களை மீறிதான் இவர் அதிமுகவில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. டாக்டர் சரவணன் எந்தக் கட்சியில் இருந்தாலும் அதில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள நினைப்பவர். அவர் இந்த மும்மூர்த்திகளை மீறி மதுரை அதிமுகவில் அரசியல் செய்வது சாத்தியமா என்ற கேள்வி இப்போது அதிமுகவில் எழுந்துள்ளது.

டாக்டர் சரவணனிடம் கேட்டபோது, ''டாக்டர் தொழிலை தாண்டி பொதுநல சேவைக்காக தொடர்ந்து அரசியலில் பயணிக்க விரும்புகிறேன். தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும்தான் பெரிய கட்சிகள். அதில், திருப்பி திமுகவிற்கு செல்ல விரும்பவில்லை. கே.பழனிசாமி தலைமையில் அதிமுகவுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளதால் அந்தக் கட்சியில் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன்'' என்றார்.

மதுரை மாநகர அதிமுகவினரிடம் கேட்டபோது, ''அவர் அதிமுகவில் நேரடியாக கே.பழனிசாமியை சந்தித்து சேர்ந்துள்ளார். அவர் அதிமுகவில் சேர்ந்த விவரம், உள்ளூர் கட்சியினருக்கே தெரியவில்லை'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x