Published : 04 Jan 2023 02:35 PM
Last Updated : 04 Jan 2023 02:35 PM
ஈரோடு: பெரியாரின் கொள்ளுப்பேரனும், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவுமான திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவு காரணமாக காலாமானர். அவருக்கு வயது 46.
திராவிடர் கழக நிறுவனர் பெரியார் ஈ.வெ.ராமசாமியின் அண்ணன் கிருஷ்ணசாமியின் மகன் ஈ.வெ.கி.சம்பத். திமுக, காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கட்சி என அரசியல் பயணத்தைத் தொடர்ந்த சம்பத்தின் மகன் ஈவிகேஎஸ் இளங்கோவன். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், மத்திய அமைச்சர் பதவிகளை வகித்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா (46).
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார் திருமகன் ஈவெரா. அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியின் சார்பில் தமாகா இளைஞரணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா போட்டியிட்டார். இந்த தேர்தலில், 8904 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். 41 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோட்டில் காங்கிரஸ் வெற்றிபெற்று, பெரியாரின் கொள்ளுப்பேரன் திருமகன் ஈவெரா சட்டசபைக்குச் சென்றார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த திருமகன் ஈவெரா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள தனது வீட்டில் இருந்த திருமகன் ஈவெராவிற்கு இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக, வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ஈரோடு கச்சேரி சாலையில் உள்ள அவரது வீட்டில் திருமகன் ஈவெராவின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் பதவி வகித்து வந்த திருமகன் ஈவெராவிற்கு, மனைவி மற்றும் மகள் உள்ளனர். பி.ஏ. பொருளாதாரப் பட்டப்படிப்பு படித்துள்ள திருமகன் ஈவெரா, ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றபின், தொகுதி மக்களுடன் நெருக்கிய தொடர்பை ஏற்படுத்தும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். இளம் வயது எம்.எல்.ஏ.வாக சட்டப்பேரவைக்குள் நுழைந்த பெரியாரின் கொள்ளுப்பேரன் திருமகன் ஈவெராவின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT