Published : 04 Jan 2023 04:18 AM
Last Updated : 04 Jan 2023 04:18 AM

‘ஒருங்கிணைப்பாளர்கள்’ என குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் அனுப்பிய 2-வது கடிதத்தையும் ஏற்க இபிஎஸ் தரப்பு மறுப்பு

சென்னை: தேர்தல் ஆணையத்தின் கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்க ‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்’ என்று குறிப்பிட்டு, தலைமை தேர்தல் அதிகாரி 2-வது முறையாக தபாலில் அனுப்பிய கடிதத்தையும் பழனிசாமி தரப்பினர் நிராகரித்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோர், தாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்தே வாக்களிக்கும் வகையில் ரிமோட் மின்னணு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது. இதுதொடர்பாக மாநிலங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்துகளை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. இதற்கான கூட்டம் வரும் 16-ம் தேதி டெல்லியில் நடக்க உள்ளது.

இதற்காக, அந்தந்த மாநில தேர்தல் அதிகாரிகள் மூலம், அந்த கட்சிகளுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பாமக ஆகிய அங்கீகரிக்கப்பட்ட மாநிலக்கட்சிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வாயிலாக கடிதம் அனுப்பப்பட்டது. இதில், அதிமுகவுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிமுக தற்போது பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரு அணியாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. அத்துடன், பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவை கூட்டி, ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கியதுடன், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் பழனிசாமி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், பழனிசாமி நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று நீதிமன்றத்தை நாடியுள்ள ஓபிஎஸ், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தான் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்தான், தேர்தல் ஆணையத்தின் அழைப்புக் கடிதம், உரிய அலுவலர் மூலம் சென்னைராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தை பெற்றுக்கொள்ளாத பழனிசாமி தரப்பினர், ‘அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் இல்லை’ என்று கூறி அதை திருப்பி அனுப்பினர்.

இதையடுத்து, அதே பெயர்களில் அந்த கடிதத்தை தலைமை தேர்தல் அதிகாரி நேற்று முன்தினம் மீண்டும் அதிமுக அலுவலகத்துக்கு தபாலில் அனுப்பி வைத்துள்ளார். அத்துடன், தேர்தல் ஆணையத்திடம் உள்ள தகவல்களின்படி, ஒருங்கிணைப்பாளர், இணைஒருங்கிணைப்பாளர் என்று இருப்பதால், அந்த பெயரில் அனுப்பப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்திருந்தார். இதுபற்றிய தகவல்களை தேர்தல் ஆணையத்துக்கும் மின்னஞ்சல் மூலம் சத்யபிரத சாஹு நேற்று அனுப்பியுள்ளார்.

இதற்கிடையே, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தலைமை தேர்தல் அதிகாரி தபாலில் அனுப்பிய 2-வது கடிதத்தையும் பழனிசாமி தரப்பினர் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தேர்தல் ஆணையத்தின் கூட்டத்தில் பழனிசாமி தரப்பினர் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேநேரம், ஓபிஎஸ் தரப்பினர் இந்த கடிதத்தை பெற்று, தேர்தல் ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x