Published : 04 Jan 2023 06:13 AM
Last Updated : 04 Jan 2023 06:13 AM

தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் ரூ.16 கோடியில் ஜிம்னாசியம், ஓடுதளம்: முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்

மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் திறக்கப்பட்ட செயற்கையிழை ஓடுதளம்.

சென்னை: தமிழ்நாடு உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.15.60 கோடி மதிப்பிலான ஜிம்னாசியம், செயற்கை இழை ஓடுதளம் உள்ளிட்டவற்றை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் நேற்றுதிறந்து வைத்தார். மின்துறையில் 101 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் அப்போது அவர் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டில் நாட்டிலேயே மிகச்சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்கவும், தேசிய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுபோட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று வெற்றிபெறும் வகையிலும் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், விளையாட்டுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.7 கோடியில் 400 மீட்டர் செயற்கை இழை ஓடுதளம், ரூ.5.10 கோடியில் பல்நோக்கு ஜிம்னாசியம், ரூ.3.50 கோடியில் ஆசிரியர்களுக்கான குடியிருப்புகள் என ரூ.15.60 கோடியில் அமைக்கப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகளை காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

மின்சார வாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் மறைந்த 101 பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக, 10 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், செந்தில்பாலாஜி, தலைமைச் செயலர் இறையன்பு, விளையாட்டு துறை செயலர்அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் கா.ப.கார்த்திகேயன், எரிசக்தி துறை செயலர் ரமேஷ் சந்த் மீனா, மின்னுற்பத்தி பகிர்மானக் கழக தலைவர் ராஜேஷ் லக்கானி, பகிர்மான பிரிவு இயக்குநர் சிவலிங்கராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதேநேரத்தில் மேலக்கோட்டையூரில் பல்கலைக்கழக வளாகத்தில், செங்கல்பட்டு ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் குத்துவிளக்கேற்றி இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) முனைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x