Published : 05 Dec 2016 10:24 AM
Last Updated : 05 Dec 2016 10:24 AM

மக்கள்தொகை பெருக்கத்தால் குறைந்துவரும் மண் வளம்

இன்று உலக மண் வள தினம்

நாட்டின் முன்னேற்றத்துக்கு விவசாயம் முதுகெலும்பு. அந்த விவசாயத்துக்கு முதுகெலும்பாக திகழ்வது மண். உலகில் ஜீவ ராசிகளின் வாழ்க்கைக்குப் புகலிட மாகவும் இருக்கிறது. மண்ணை உயிரற்ற பொருள் என கருது கிறோம். அது தவறு என்கின்றனர் விவசாய வல்லுநர்கள்.

“மண்ணுக்கும் உயிர் உள்ளது. சுவை, நிறம், மணம் உள்ளது. மழை பெய்தால் மணம் வீசும், கையில் எடுத்தால் மற்றொரு மணம் வீசும். நிறத்தின் அடிப்படையில் செம்மண், கரிசல், வண்டல் என மண்ணில் பலவகைகள் உள்ளன. பூமியில் 2.5 செமீ அளவு மண்ணை உருவாக்க இயற்கை 10 ஆயிரம் ஆண்டுகள் நெடிய போராட்டம் நடத்த வேண்டும்” என்கின்றனர். இவ்வளவு பெரிய உழைப்பு தேவைப்படும் மண்ணை, மனிதன் எப்படியெல்லாம் பாதுகாக்க வேண்டும். இந்த மண் வளத்தைப் பாதுகாக்கவும், உறுதி செய்யவும் இதனை விவசாயிகள், மக்களுக்கு நினைவுப்படுத்தவும் ஆண்டு தோறும் டிசம்பர் 5-ம் தேதி உலக மண்வள தினமாக கடைபிடிக்கப் படுகிறது.

இதுகுறித்து மதுரை மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பூபதி கூறியதாவது: உலகத்தில் 3-ல் 2 பங்கு பரப்பு தண்ணீர். 3-ல் ஒரு பங்கு மட்டுமே மண். இந்த மண்ணிலும் 3-ல் ஒரு பங்கு மட்டுமே தரமான மண். அந்த மண்ணை நம்பியே விவசாய சாகுபடி நடக்கிறது. இந்த மண் பரப்பில் அன்றாட உண வுக்குத் தேவையான அனைத்து உணவு தானியங்களும் தயாரிக்கப் படுகின்றன. உலகின் தற்போதைய மக்கள்தொகை 740 கோடி. இதில் சீனாவில் மட்டும் 138.5 கோடியும், இந்தியாவில் 132 கோடி மக்கள் தொகையும் நெருங்கிவிட்டது. 2100-ல் உலகின் மக்கள்தொகை 1,120 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருபுறம் மக்கள்தொகை உயர்ந்துகொண்டே சென்றாலும், மற்றொருபுறம் அந்த மக்கள் பயன்பாட்டுக்கு அதே பரப்பில் உள்ள மண்தான் உள்ளது. அந்த மண்ணில்தான் விவசாயம் செய்ய முடியும். சாலைகள், வீடுகள் கட்ட முடியும்.

கட்டிடப் பெருக்கத்தால் தற் போது விவசாய சாகுபடி பரப்பு குறைந்துகொண்டு வருகிறது. இந்த சவால்களை எல்லாம் சமாளித்து உணவு உற்பத்தியை அதிகரிக்க, மண்ணின் தரத்தைப் பாதுகாக்க வேண்டும். 100 கிராம் மண்ணை எடுத்துக்கொண்டால், 45 சதவீதம் மண்ணில்தான் தாதுப் பொருட்கள் இருக்கும். 25 சதவீதம் ஈரப்பதம் இருக்கும். 25 சதவீதம் காற்று இருக்கும். மீதி 5 சதவீதம்தான் மண்ணை உயிரோட்டமாக வைத் திருக்கும் அங்ககப் பொருட்கள் இருக்கும். 5 சதவீதம் அங்ககப் பொருட்கள் இருந்தாலே அந்த மண் தரமான மண்ணாக கருதப்படும். ஆனால், இன்று உரம், பூச்சிக் கொல்லி மருந்து பயன்பாட்டால் மண்ணில் மிகக் குறைந்த அங்ககப் பொருட்களே காணப்படுகின்றன. வனப்பகுதி, மலையடிவார மண்ணில்தான் 10 சதவீதம் அங்ககப் பொருட்கள் இருக்கிறது.

நல்ல மண் வளம் இருந்தால் மண்ணில் கண்ணுக்கு தெரியக் கூடிய அளவுக்கு மண் புழுக்கள் இருக்கும். ஒரு சதுர மீட்டருக்கு 12 முதல் 13 மண் புழுக்கள் இருக்கும். இப்போது மேலோட்டமாக மண் புழுக்களைப் பார்க்க முடியவில்லை. குறைந்த பட்சம் 8, 10 மண் புழுக்கள் இருந் தால் அது சிறப்பான மண்ணாக கருதப்படுகிறது. பயிர்கள் வளர் வதற்கு தழைச்சத்து, மணிச் சத்து, சாம்பல் சத்துகள் போன்றவை தேவை.

இந்திய மண்ணில் சாதாரண மாகவே 60 சதவீதம் சாம்பல் சத்து இருக்கிறது. அங்ககப் பொருட்கள் மண்ணில் இருக்கக்கூடிய சத்து களைப் பிரித்து பயிர்களுக்கு கொடுக்கும். மண்ணில் அங்ககப் பொருட்களை அதிகரிக்க இயற்கை உரங்கள், மண் புழு உரங்கள், அசோஸ்பைரில்லம், பசுந்தாள் உரங்கள் இட வேண்டும். இந்த உயிர் உரங்கள் மண்ணுக்குள் பெருகி, மண் வளத்தை அதிகரிக் கும். மழைக்காலங்களில் மண் அரிப்பைத் தடுக்க வேண்டும். அதற்கு நிலங்களில் கழிவுநீர் குட்டைகள், பாத்திகள், வரப்புகள், புற்களை அமைக்க வேண்டும். விவசாய நிலங்களில் மழை பெய் தால் அதை அவர்கள் தோட்டங் களிலேயே தேங்குகிற மாதிரி மண் அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x