Published : 22 Dec 2016 09:16 AM
Last Updated : 22 Dec 2016 09:16 AM
ஊழல், முறைகேட்டில் ஈடுபட்டதாக ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக போதிய ஆவணங்கள் கிடைக்கும் நிலையில் அவரை கைது செய்ய முடியுமா என்பது குறித்து சட்டவல்லுநர்கள் சிலரிடம் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது:
பி.வில்சன் (மத்திய முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்)
ஐஏஎஸ் அதிகாரி மீது லஞ்ச ஒழிப்பு சட்டம் அல்லது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்யும்போதோ அல்லது கைது செய்யும்போதோ யாரிடமும் முன் அனுமதி பெறத் தேவையில்லை. ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் முன்பு குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 197-ன்படி மத்திய பணியாளர் நலத் துறையிடம் அனுமதி பெற வேண்டும்.
ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பது உறுதி செய்யப்பட்டால் அதுகுறித்து வருமான வரித்துறையினர் மாநில அரசுக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிப்பர். அதன்பிறகு அந்த ஐஏஎஸ் அதிகாரியை மாநில அரசு பணி இடைநீக்கம் செய்யும். அந்த நடவடிக்கை எடுக்காமல்கூட இருக்கலாம். அதேநேரத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பதாக மாநில லஞ்ச ஒழிப்புப் போலீஸுக்கு வருமான வரித்துறையினர் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்தால், அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்வார்கள். பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரியை கைது செய்யலாம். அதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை.
கே.எம்.விஜயன் (சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்)
வருமான வரித்துறையினருக்கு சோதனை நடத்தவும், பணத்தைப் பறிமுதல் செய்யவும் மட்டுமே அதிகாரம் உள்ளது. வருமான வரித்துறை சோதனை நடத்தியபிறகு, சம்பந்தப்பட்டவர் குற்றம் செய்திருப்பதாகக் கருதினால் அதன் தன்மையைக் கருத்தில் கொண்டு அமலாக்கத் துறை அல்லது சிபிஐ-யிடம் தெரிவிக்கப்படும். பின்னர் சிபிஐ வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரியைக் கைது செய்யும்போது மத்திய அரசிடம் தகவல் தெரிவிப்பார்கள்.
வீ.கண்ணதாசன் (சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்)
கைது செய்ய அதிகாரம் பெற்ற எந்த போலீஸாரும் ஒருவரைக் கைது செய்யலாம். அவர்கள் யாரிடமும் முன் அனுமதி பெறத் தேவையில்லை. ஆனால், ஐஏஎஸ் அதிகாரியைக் கைது செய்யும் முன்பு அந்தந்த மாநில ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தகவல் தெரிவிக்கும் நடைமுறை உள்ளது.
இவ்வாறு பல்வேறு சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT