Published : 03 Jan 2023 02:25 PM
Last Updated : 03 Jan 2023 02:25 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தற்போது 21 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் 2 லட்சம் பேர் பங்கேற்றதால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனையை அதிகரித்துள்ளோம் என்று சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமலு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கரோனா கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இச்சூழலில் வெளிநாடுகளில் தொற்று அதிகரிப்பால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பொது இடங்களில் மீண்டும் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமலு கூறியதாவது: “புதுச்சேரியில் கடந்த நவம்பர் 27 ம் தேதி கரோனா பாதிப்பு பூஜ்ஜியமாக இருந்தது. கடந்த சில நாட்களாய் எடுக்கப்பட்ட பரிசோதனையில் ஒன்று, இரண்டு என பாதிப்பு இருந்தது. நேற்று 678 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் புதுச்சேரி - 2, காரைக்கால்-2 , ஏனாம்-1 என 5 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தமாக 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20 பேர் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டும், ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புத்தாண்டுக் கொண்டாட்டடத்தில் 2 லட்சம் பேர் பங்கேற்றனர். இதனால், கரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா பரிசோதனையை அதிகரித்துள்ளோம். குறைந்தது ஆயிரம் பரிசோதனைகள் தினந்தோறும் செய்ய உள்ளோம். அதற்கு தேவையான சாதனங்கள் உள்ளன. மக்கள் முகக்கவசம் அணிவது, கூட்டம் அதிக இடங்களை தவிர்ப்பது, இதுவரை செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி போடுவது மிக நல்லது. போதிய தடுப்பூசி கையிருப்பில் உள்ளன.
இதுவரை உருமாறிய கரோனா பாதிப்பு புதுச்சேரியில் இல்லை. உருமாறிய கரோனாவை கண்டறிய புது சாதனத்தை புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்பாட்டுக்கு கொண்டு வருகிறோம். ஓரிரு நாட்களில் பரிசோதனை செய்யத் தொடங்குவோம்” என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT