Published : 03 Jan 2023 01:33 PM
Last Updated : 03 Jan 2023 01:33 PM

கரும்பு கொள்முதல் | விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பது உறுதி செய்யப்படும்: அமைச்சர் சக்கரபாணி

பொங்கல் பரிசுத் தொகுப்பு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்

சென்னை: பொங்கல் பரிசுக்கு கரும்பு கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

சென்னை, கோபாலபுரம், கான்ரான்ஸ்மித் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் விநியோகம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, "குடும்ப அட்டைதாரர்கள் 2.19 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இன்று முதல் டோக்கன் வழங்கக் கூடிய பணி தொடங்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.1,000 ரொக்கம், தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும். ஜனவரி 9-ம் தேதி முதல்வர் ஸ்டாலின், பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

அனைத்து மாவட்டங்களிலும் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நியாய விலைக் கடைகளில் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஜனவரி 12- ம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற முடியாதவர்களுக்கும், வெளியூரில் வசிப்பவர்கள் மற்றும் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13-ம் தேதியன்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். கடந்தாண்டு திருப்பத்தூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் தான் பொங்கல் தொகுப்பு பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக புகார் வந்தது. அதற்கு உடனடி நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக இருக்கும். தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இடைத்தரகர்கள் இல்லாமல் கரும்பு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பது உறுதி செய்யப்படும்." இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x