Published : 03 Jan 2023 11:08 AM
Last Updated : 03 Jan 2023 11:08 AM

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தல் வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும்: ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் | கோப்புப் படம்

சென்னை: தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடங்கியுள்ளன. அத்தகைய முயற்சிகள் எதையும் தமிழ்நாடு அரசு அனுமதிக்கக்கூடாது; நேர்மையாக தேர்தலை நடத்தும் பொறுப்பை அரசே ஏற்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் விருப்பமாகும்.

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தலை ஜனவரி 19-ம் தேதி வரை வாக்குச்சீட்டு முறையில் நடத்துவதற்கு அதன் நிர்வாகிகள் திட்டமிட்டிருந்தனர். அதற்காக வாக்காளர் பட்டியலிலும், தேர்தல் நடத்தும் முறையிலும் பல்வேறு குளறுபடிகள் செய்யப்பட்டிருந்தன. அவற்றை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து ஆன்லைன் முறையில் வாக்குப்பதிவை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கடந்த நவம்பர் 20-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன். அதைத் தொடர்ந்து மேலும் பல அரசியல் கட்சிகளும், மருத்துவர் சங்கங்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தியிருந்தன.

மருத்துவக் கவுன்சில் தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அமர்வு, மருத்துவக் கவுன்சில் தேர்தலை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க ஆணையிட்டது. அதற்குள்ளாக தமிழ்நாடு மருத்துவப் பதிவு சட்டத்தில் திருத்தங்களைச் செய்து, அதனடிப்படையில் தேர்தலை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு ஆணையிட்டது. உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை தமிழ்நாடு அரசும் ஏற்றுக் கொண்டது.

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் என்ற அக்கறை கொண்டவர்கள் அனைவரும் உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதித்து செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் இப்போதைய நிர்வாகிகளுக்கு அந்த அக்கறை இல்லாததால், உயர்நீதிமன்ற ஒற்றை நீதிபதி தீர்ப்பை எதிர்த்து இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்திருக்கின்றனர். அதற்காக தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் நிர்வாகம் முன்வைத்திருக்கும் காரணம் சிறுபிள்ளைத்தனமானது ஆகும்.

மருத்துவக் கவுன்சில் தேர்தல் நடவடிக்கைகள் ரூ.25 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால், அதற்காக செலவிடப்பட்ட தொகை வீணாகிவிடும் என்பதும் தான் இந்த தேர்தலை ஒத்திவைப்பதற்கு எதிராக தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் நிர்வாகத்தால் முன்வைக்கப்படும் காரணம் ஆகும். ரூ.25 லட்சம் வீணாகி விடும் என்பதற்காக தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் நிர்வாகம் முறைகேடான வழிகளில், தவறானவர்களின் கைகளுக்கு செல்வதை அனுமதிக்க முடியாது என்பது தான் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒன்றரை லட்சத்திற்கும் கூடுதலான மருத்துவர்களின் மனநிலை ஆகும்.

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி வழங்குவதிலும், மருத்துவ சேவை வழங்குவதிலும் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் பங்கு ஈடு இணையற்றது. தமிழ்நாட்டில் மருத்துவம் படித்த மருத்துவர்களை பதிவு செய்யும் அதிகாரம் இந்த அமைப்புக்கு உண்டு. தமிழ்நாட்டில் அமைக்கப்படும் புதிய மருத்துவக் கல்லூரிகளை ஆய்வு செய்யவும் அவற்றுக்கு அங்கீகாரம் அளிக்கலாமா? என்பது குறித்து இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு பரிந்துரைக்கும் அதிகாரமும் இந்த அமைப்புக்கு தான் உண்டு. இத்தகைய பெருமையும், சிறப்பும் மிக்க அமைப்பின் நிர்வாகிகளாக தகுதியும், திறமையும், நேர்மையும் உள்ளவர்கள் தான் வர வேண்டும். அதற்கு மருத்துவக் கவுன்சில் தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும்; அதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

உயர்நீதிமன்ற ஒற்றை நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மருத்துவக் கவுன்சில் நிர்வாகம் மேல்முறையீடு செய்திருந்தாலும் கூட, தேர்தலுக்கு தடை விதிக்கக்கூடாது என்ற மருத்துவக் கவுன்சிலின் கோரிக்கையை ஏற்க இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மறுத்து விட்டது. அதனால், ஒற்றை நீதிபதியின் ஆணை தான் இப்போது வரை நடைமுறையில் உள்ளது. அதன்படி, 1914-ஆம் ஆண்டின் மெட்ராஸ் மருத்துவப் பதிவு சட்டத்தை வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் திருத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், வாக்காளர் பட்டியலில் 70 ஆயிரம் மருத்துவர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அப்பட்டியல் முழுமையாக சரிபார்க்கப்பட வேண்டும்; தகுதியுடைய மருத்துவர்களின் பெயர்கள் அவர்களைப் பற்றிய முழு விவரங்களுடன் இடம் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும்; அப்பட்டியல் மருத்துவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு, ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அவை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த பணிகளை ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் மேற்பார்வையில் செய்து முடித்த பிறகு, மருத்துவக் கவுன்சில் தேர்தல் ஆன்லைன் முறையில் நடத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்." இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x