Published : 07 Dec 2016 03:33 PM
Last Updated : 07 Dec 2016 03:33 PM

சென்னை பரிதவித்த நாளில் அன்னமிட்ட அம்மா உணவகங்கள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகளுக்காக உணவகங்கள், கடைகள் மூடப்பட்டு சென்னை நகரமே நேற்று (செவ்வாய்க்கிழமை) ஸ்தம்பித்திருந்தாலும், அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு மக்களுக்கு இலவசமாக உணவுகளை வழங்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு தமிழகமே திரண்டு நின்று துயரப்பட்டாலும், அம்மா உணவகங்கள் திறந்திருந்தன. அங்கே உணவுகள் விற்கப்படவில்லை. இலவசமாக வழங்கப்பட்டன.

சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களில் சுமார் 350 உணவகங்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்பட்டு, தொடர்ந்து உணவுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

விருகம்பாக்கம் காமராஜர் சாலையில் உள்ள அம்மா உணவகத்துக்கு வந்த கிருபா சங்கர் என்பவர், செவ்வாய்க்கிழமை மாலை 7 மணியளவில் சுமார் 20 பேர் அங்கு சாப்பிடுவதைப் பார்த்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய கிருபா, "நாள் முழுவதும் திறந்திருந்த அம்மா உணவகம், மக்களுக்கு உணவளித்தது. சென்னையின் பெரும்பாலான கடைகளும், ஹோட்டல்களும் மூடியிருந்த நேரத்தில், அம்மா உணவகங்கள் இலவசமாக உணவளித்து முன்னாள் முதல்வருக்கு சரியான வழியில் தங்கள் அஞ்சலியைச் செலுத்தின’ என்றார்.

தினசரிக் கூலித் தொழிலாளியான மேரி, திருவான்மியூர் அம்மா உணவகத்தில் தனது மதிய உணவை உட்கொண்டுள்ளார். தினசரி 5 கி.மீ. தூரம் நடந்து வந்து அங்கே சாப்பிடுவதாகவும் மேரி கூறினார்.

அதே நேரத்தில் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த நரேஷ் குமார், வேளச்சேரியில் உள்ள அம்மா உணவகம் திறக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார். சிந்தாதிரிப்பேட்டை மற்றும் சிஐடி அம்மா உணவகங்களும் திறக்கப்படவில்லை.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி தரப்பில் கூறும்போது, சமையலுக்குத் தேவையான கையிருப்புகள் இல்லாததால், உணவகத்தை மூடவேண்டிய நிலை ஏற்பட்டது என்றார். (அம்மா உணவகத்தில் 40 நாட்களுக்குத் தேவையான கையிருப்புகள் எப்போதும் வைக்கப்பட்டிருக்கும்.)

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய மலிவு விலை அம்மா உணவகங்கள், உலகளாவிய கவனத்தைப் பெற்றதும், எகிப்தில் இருந்து ஒரு குழு 2014-ல் தமிழகம் வந்து இந்த முறையைக் கற்றுச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x