Published : 03 Jan 2023 04:10 AM
Last Updated : 03 Jan 2023 04:10 AM
பொள்ளாச்சி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளர்களின் வருகையை என்எம்எம்எஸ் செயலி மூலம் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை அமல்படுத்தியது. 2009-ம் ஆண்டு இத்திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என பெயர் மாற்றப்பட்டாலும், தமிழக கிராமப்புற மக்களால் 100 நாள் வேலை திட்டம் என அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டில் பொதுமக்களுக்கு 100 நாட்கள் கட்டாயம் வேலை வாய்ப்பு அளிக்கப்படுவதால், கிராமப்புற ஏழை மக்களின் வேலைக்கான உரிமை நிலைநாட்டப்படுகிறது.
இந்த திட்டத்தில் தனிநபர் கழிப்பறைகள் உருவாக்கப்படுவதால் கிராமப்புறங்களில் சுகாதார மேம்பாடும், நிழல் தரும் மரங்கள், பயன் தரும் மரங்கள் ஆகியவை நடுவதால், இயற்கை வளமும் மேம்படுத்தப்படுகிறது. ஒரு நபருக்கு தினசரி குறைந்தபட்ச ஊதியமாக ரூ.281 வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் 37 மாவட்டங்களில் இத்திட்டத்தில் 94 லட்சத்து 78 ஆயிரத்து 824 பேர் பயனாளிகளாக உள்ளனர்.
இத்திட்டப் பணிகளை மேற்பார்வை செய்ய பணித்தள பொறுப்பாளர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காலை 9 மணி முதல் 11 மணிக்குள்ளும், மதியம் 2 மணி முதல் 4 மணிக்குள்ளும் இரு வேளை பணியாளர்களின் வருகை பதிவு செய்யப்படும். கிராமப்புற மக்களுக்கு பயனளித்துவந்த இந்த திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, மின்னணு வருகை பதிவேடு உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. மின்னணு வருகை பதிவேடு முறையில், செவ்வாய்க்கிழமைதோறும் பயனாளிகளிடம் பெறப்படும் வேலை கேட்பு விண்ணப்பத்தின் அடிப்படையில் வேலை ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதனால் எவ்வித பாரபட்சமும் இன்றி, வெளிப்படையாக பணி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தாண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து பணிகளுக்கும் என்எம்எம்எஸ் (தேசிய மொபைல் கண்காணிப்பு அமைப்பு செயலி) மூலம் வருகை பதிவு மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. இதனால் இதுவரை 20 பணியாளர்கள் இருந்தால் மட்டுமே வருகை பதிவு செய்ய முடியும் என்ற நிலை மாறி, ஒன்று முதல் 19 பணியாளர்கள் வரை இருந்தாலும் வருகை பதிவு செய்ய முடியும் என மாற்றம் செய்யப்பட்டது.
இந்த செயலி மூலம் வருகை பதிவு மேற்கொள்ளாத பணிகளில் பணிபுரிந்த பயனாளிகளுக்கு ஊதியம் வழங்கப்படாது. இது குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், அனைத்து திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பணித்தள பொறுப்பாளர்கள் ஆகியோருக்கும் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டது.
நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்த புதுப்பிக்கப்பட்ட என்எம்எம்எஸ் வருகை பதிவு செயலி, தொழில்நுட்பக் காரணங்களால் தமிழகத்தில் பல இடங்களில் செயல்படவில்லை. இதனால் பயனாளிகளின் வருகையை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இது குறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறும்போது, “என்எம்எம்எஸ் செயலி அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம் காலையும், மதியமும் பயனாளர்களின் புகைப்படங்கள், பணித்தளம் ஆகியவை ‘ஜியோடேக்’ செய்யப்படுகின்றன. தொழில்நுட்பக் காரணங்களால் நேற்று வருகை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விரைவில் சரிசெய்யப்பட்டு விடும். பயனாளர்களின் வருகையை எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்து மேல் அதிகாரிகளிடம் கேட்கப்பட்டுள்ளது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT