Published : 09 Dec 2016 12:08 PM
Last Updated : 09 Dec 2016 12:08 PM

கல் குவாரிகள் வடிவத்தில் பெரம்பலூரில் சூறையாடப்படும் இயற்கை வளம்

பெரம்பலூர் மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் மலைகளில் பல இப்போது காணாமல் போய்விட்டன.

இம்மாவட்டத்தில் அரசு அனுமதியுடன் நடைபெறும் கல் குவாரிகள், இம்மாவட்ட இயற்கை வளத்தைச் சூறையாடிக் கொண்டிருப்பதுடன் இம்மாவட்ட மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகளையும், சிக்கல்களையும் உருவாக்கியபடி உள்ளன.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் கல் குவாரிகள் அமைந்துள்ளன. சுமார் 100-க்கும் அதிகமான குவாரிகள் இம்மாவட்டத்தில் உள்ளன. இதனால் விவரிக்க இயலாத சோதனைகளை, நெருக்கடிகளை இம்மாவட்ட மக்கள் சந்தித்து வருகின்றனர்.

அரசுக்கு வருவாய் இழப்பு

இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் அருள், ‘தி இந்து’விடம் கூறியது:

கல் குவாரிகளால் இம்மாவட்டம் பெரிய சுற்றுச்சூழல் சீரழிவைச் சந்தித்து வருகிறது. குவாரி உரிமையாளர்கள் பொதுமக்களுக்குச் சொந்தமான பாதையை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். அனுமதி பெறாத இடத்திலும், அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக ஆழத்துக்கு கற்களை வெட்டி எடுத்துச் செல்கின்றனர். ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் கள்ளத்தனமாக பல்வேறு இடங்களில் குவாரிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

பாறைகளை தகர்க்க அதிக சக்தி வாய்ந்த வெடிமருந்துகளை பயன்படுத்துகின்றனர். இதனால் அதிர்ச்சியில் மலைப்பகுதியில் வசிக்கும் மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள், வனப்பகுதியை விட்டு வெளியே வந்துவிடுவதும், விபத்தில் சிக்கி உயிரிழப்பதும் இம்மாவட்டத்தில் வழக்கமான ஒன்றாகிவிட்டது.

கால்நடைகள் காலையில் மலைப்பகுதிகளில் மேய்ச்சலுக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பும். மலைகள் சிதைக்கப்பட்டதால் கால்நடைகளுக்கு மலைப்பகுதி காடுகளில் எளிதாகக் கிடைத்த உணவுப் பொருட்கள் இப்போது கிடைக்காமல் கடும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குவாரி அமைந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் கால்நடைகள் வளர்ப்பதையே விட்டுவிட்டனர்.

மலைகளிலிருந்து மழைக்காலத்தில் பெருக்கெடுத்து வரும் தண்ணீரை இப்பகுதி மக்கள் ஆறு, ஏரி, குளம், கிணறு, ஓடை என பல்வேறு வடிவங்களில் நீர்நிலைகளை உருவாக்கி சேமித்து விவசாயத்துக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயத்துக்கு பாசன வசதி வழங்கும் ஜீவநதிகள் எதுவும் இல்லை. ஆனால், அதற்காக துவண்டு கிடக்காமல் மலைகளிலிருந்து கிடைக்கும் தண்ணீரைச் சேமித்து விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். மலைகள் இல்லையெனில் தண்ணீர் கிடைக்காது. தண்ணீர் இல்லையெனில் விவசாயம் நடக்காது. இதன்பின்னர், மக்கள் வாழ்வாதாரம் தேடி ஊரைவிட்டு வெளியேறும் அவலநிலை உண்டாகும்.

குவாரிகளில் கற்களை வெட்டி எடுத்து முடித்த பிறகு அப்பகுதியில் மரங்கள் வளர்க்க வேண்டும். ஆபத்தான குழிகளாக இருந்தால் அவற்றை மனிதர்கள், கால்நடைகள் செல்லாதபடி வேலி அமைத்து மூட வேண்டும் என்பது விதி. இதை எந்த குவாரி நிறுவனமும் பின்பற்றுவதில்லை. அதுகுறித்து அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை என்றார்.

விதிமுறைகளை பின்பற்றுவதில்லை

ஆம் ஆத்மி கட்சியின் மாவட்டத் தலைவர் முகமது இக்பால் கூறியது:

பெரம்பலூர் மாவட்டத்தில் சித்தளி, பேரளி, கவுல்பாளையம், இரூர், செட்டிக்குளம், பிரம்மரிஷி மலை, எளம்பலூர், தெரணி, ஊத்தங்கால், நெடுவாசல் உள்ளிட்ட பலவேறு பகுதிகளில் அமைந்துள்ள கல் குவாரிகளாலும், குன்னம் தாலுகாவில் அமைந்துள்ள சுண்ணாம்புக் கல் குவாரிகளாலும் இம்மாவட்ட மக்கள் பெரும் சோதனைகளை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

கல் குவாரிகளால் பெரும் காற்று மாசு ஏற்பட்டு இம்மாவட்ட மக்கள் பலர் சுவாசக்கோளாறு உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அலைந்து கொண்டிருக்கின்றனர். குவாரிகள் அமைந்துள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கிராமப் பகுதிகளிலும், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியும் பாறைகளை ஜல்லிக் கற்களாக உடைக்கும் கிரஷர் யூனிட்கள் நிறைய உள்ளன. இந்த கிரஷர் நிறுவனங்களிலிருந்து கற்களை உடைக்கும்போது உருவாகும் துகள்கள் தூசு வடிவத்தில் காற்றில் கலந்து காற்று மாசு ஏற்படுத்துகின்றன. ‘ஸ்ப்ரிங்க்ளர்’ என்ற சாதனம் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து காற்றில் தூசு கலக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற விதியை பெரும்பாலான கிரஷர் நிறுவனங்கள் பின்பற்றுவதே இல்லை.

கல்குவாரிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிரஷர் நிறுவனங்களில் பணிபுரிந்த ஊழியர்கள் 2 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். கல்பாடி, கவுல்பாளையம் மேற்கு மலை குவாரிகளில் கிரஷர் நிறுவனங்களில் பணிபுரிந்த தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். ஆபத்து நிறைந்த பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு குவாரி அதிபர்கள் காப்பீடு எதுவும் செய்வதில்லை. மேலும், பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்குவதில்லை.

குவாரிகளில் நேரிடும் பல விபத்துகள், உயிரிழப்புகள் வெளியே தெரியாமல் விபத்தில் சிக்கியவரின் உறவினர்களுக்கு சிறிய தொகையைக் கொடுத்து மறைக்கப்பட்டுவிடும். கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் இந்த முறைகேடுகளைக் கண்டுகொள்வதேயில்லை என்றார்.

வாழத் தகுதியில்லாததாக மாறிவிட்டது எங்கள் கிராமம்...

கவுல்பாளையம் மேற்குமலை கோவிந்தன் கூறியபோது,

“கவுல்பாளையம் மேற்குமலை பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் உள்ளன. இங்கு கல் குவாரி வந்த பிறகு நிம்மதியே போய்விட்டது. சக்தி வாய்ந்த வெடிகளை வைத்து பாறைகளை உடைப்பதால் வீட்டுச் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைகின்றன. வெடி வைப்பது குறித்து முன்னறிவிப்பு செய்வதில்லை.

கிரஷர் துகள்கள் காற்றில் பறந்து வந்து உணவு, குடிநீரில் விழுந்து பயன்படுத்த முடியாதபடி செய்துவிடுகிறது. குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் இப்பகுதியில் வசிக்கவே முடியாது. பயிர்கள், விளைநிலங்களில் பாறை துகள்கள் விழுவதால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது.

ஒரு காலத்தில் பசுமையாக இருந்த எங்கள் கிராமம், இப்போது மக்கள் வாழத் தகுதியில்லாததாக மாறிவிட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் குவாரிகள் அமைந்துள்ள அனைத்து கிராமங்களிலும் நிலைமை இதுதான்” என்றார்.

ஆய்வு செய்து நடவடிக்கை

மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகளைக் குறிப்பிட்டு புவியியல் மற்றும் சுரங்கத் துறை துணை இயக்குநர் சரவணனிடம் கேட்டபோது,

“பெரம்பலூர் மாவட்டத்தில் 100-க்கும் அதிகமான குவாரிகள் முன்பு இருந்தன. இப்போது 44 குவாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிலும் 34 குவாரிகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.

புதிதாக குவாரிகளுக்கு அனுமதி வழங்குவதில்லை. விதிமீறலில் ஈடுபடும் குவாரிகள் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். குவாரிகளால் ஏற்பட்ட பாதுகாப்பு இல்லாத குழிகளை மூடுவதற்கு அல்லது வேலி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x