Published : 03 Jan 2023 06:22 AM
Last Updated : 03 Jan 2023 06:22 AM
சென்னை: திமுக தொண்டர் அணி மாவட்ட, மாநகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நிர்வாகிகளாக கராத்தே, குங்பூ, சிலம்பத்தில் தேர்ச்சி பெற்றவர்களை கண்டறிந்து நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திமுகவில் இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி உள்ளிட்ட 23 அணிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த அணிகளுக்கான மாநில நிர்வாகிகள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து அணிகளுக்கும் மாவட்டம், மாநகரம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் அளவில் நிர்வாகிகள் நியமிக்க வேண்டும். இதன் மூலம், 15 லட்சம் பேருக்கு கட்சியில் பதவிகள் கிடைக்கும் என்றார். இதைத் தொடர்ந்து, அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக, அந்தந்த அணிகளின் மாநில செயலாளர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
சமீபத்தில் மாணவர் அணி செயலாளர் சிவிஎம்பி எழிலரசன், அந்த அணிக்கான மாவட்ட நிர்வாகிகள் நியமனத்துக்கு, நேர்காணல் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, நேர்காணல்கள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர, விவசாய அணி, ஆதிதிராவிடர் நல உரிமை அணி உள்ளிட்ட அணிகளும் நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக அறிவிப்புகளை வெளியிட்டு அதன்படி, கட்சியில் இளைஞர்கள், கட்சிப் பணியில் சிறப்பாக ஈடுபட்டு வருபவர்கள் என தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் திமுக தொண்டர் அணியின் மாநில செயலாளர் பெ.சேகர், அணியில் தற்காப்புக் கலை கற்றவர்களுக்கு இடம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிவிப்பில், ‘மாவட்ட தலைவர், துணை தலைவர், அமைப்பாளர் 50 வயதுக்கு மிகாமலும், மாவட்ட துணை அமைப்பாளர்கள் 45 வயதுக்கு மிகாமலும், ஐந்தரை அடி உயரத்துக்கு மேற்பட்டவர்களாகவும் கண்டிப்பாக இருக்க வேண்டும். சிலம்பம், தேக்வாண்டோ, கராத்தே, குங்பூ உள்ளிட்ட தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்றுள்ள கட்சியினரை கண்டெடுக்க வேண்டும்.
தற்போதுள்ள மாவட்ட, மாநகர, பேரூர், பகுதி, ஒன்றிய அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மீண்டும் அந்த பொறுப்புகளுக்கு வர விரும்பினால் அவர்களும் விண்ணப்பிக்கலாம்’ என்று தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, பூத் ஏஜென்ட்கள் நியமனம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், பல்வேறு அறிவுறுத்தல்களை கட்சியினருக்கு வெளியிட்டிருந்தார். அதில் பூத் ஏஜென்ட்கள் திறன் மிக்க இளைஞர்களாகவும், குறிப்பாக வழக்கறிஞர்களாகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT