Published : 02 Jan 2023 06:59 PM
Last Updated : 02 Jan 2023 06:59 PM
சென்னை: "புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவைக் கலந்த தீய சக்திகளை இதுவரை கைது செய்யாதது வெட்கக்கேடானது" என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவைக் கலந்த தீய சக்திகளை இதுவரை கைது செய்யாதது வெட்கக்கேடானது. கைது செய்ய முடியவில்லையெனில் அது தமிழக அரசின் இயலாமையை, நிர்வாக சீர்கேட்டை உணர்த்துகிறது. கைது செய்ய மனமில்லையெனில், அது திமுகவின் தமிழக அரசியலின் சாதி வெறியின் கோர முகத்தை உணர்த்துகிறது.
மேலும், மனிதக் கழிவு கலந்த குடிநீர் தொட்டியை சுத்தப்படுத்தி விட்டதாகவும், தூய்மைப்படுத்தி மீண்டும் தண்ணீர் விநியோகம் தொடங்கிவிட்டதாகவும் அறிவித்திருப்பது வெட்கக்கேடானது, அவமானகரமானது. உடனடியாக அந்த குடிநீர் தொட்டி அப்புறப்படுத்தப்பட்டு அல்லது உடைத்தெறியப்பட்டு, புதிய குடிநீர் தொட்டி ஒன்றை நிறுவ வேண்டியது தமிழக அரசின் கடமை.
ஒவ்வொரு நாளும் மனிதக்கழிவு கலந்த குடிநீர் தொட்டியிலிருந்து குடிநீர் பெறுகிறோம் என்ற நினைப்பே அருவருப்பை உண்டாக்கி தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி உயிர் போகும் வலியை உருவாக்காதா? இந்த சிந்தனை அரசு அதிகாரிகளிடத்தில் இல்லாது போனது ஏன்? உடன் இந்த கொடூர குற்றத்தை செய்தவர்கள் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.
அந்த குடிநீர் தொட்டி அழிக்கப்பட்டு புதிய குடிநீர் தொட்டி ஒன்றை பாதிக்கப்பட்ட மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். இல்லையேல் சமூக நீதி காப்பவர்கள் என்று மார்தட்டிக் கொள்பவர்கள் வெட்கித் தலைகுனியட்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT