Published : 02 Jan 2023 02:44 PM
Last Updated : 02 Jan 2023 02:44 PM

புத்தாண்டு தினத்தன்று மெரினா கடற்கரையில் காணாமல் போன 17 குழந்தைகள் உட்பட 20 பேர் மீட்பு: காவல்துறை தகவல்

புத்தாண்டு தினத்தன்று (ஜன.1) சென்னை மெரினா கடற்கரையில் கூடியிருந்த பொதுமக்கள்

சென்னை: புத்தாண்டு தினத்தன்று மதியம் முதல் இரவு வரை உழைப்பாளர் சிலை பின்புறமுள்ள கடற்கரை மணல் பரப்பில் கூட்டத்தில் காணாமல் போன 17 குழந்தைகள் மற்றும் 3 முதியவர்கள் என 20 நபர்கள் மீட்கப்பட்டு, , மீட்கப்பட்ட குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெற்றோர் மற்றும் உரியவர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி: 2023 ஜனவரி 1, புத்தாண்டு விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் பொதுமக்கள் குடும்பத்துடன் அதிகளவு வருவார்கள் என்பதால், மெரினா கடற்கரை, அண்ணாசதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரையிலான சர்வீஸ் சாலை மற்றும் கடற்கரை மணற்பரப்பில் திருவல்லிக்கேணி மற்றும் மயிலாப்பூர் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள், ஆயுதப்படை, சிறப்பு காவல் படை, ஊர்க்காவல் படை கொண்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

குறிப்பாக, அண்ணாசதுக்கம், உழைப்பாளர் சிலை அருகில் 2 தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, கடற்கரையில் நிகழும் நிகழ்வுகள், தகவல்கள் சேகரிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டது. மேலும், கடற்கரை மணற்பரப்பில் 4 தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, சிசிடிவி கேமராக்கள், ஒலி பெருக்கிகள் அமைத்து கண்காணித்தும், காவல்துறை சார்பாக விழிப்புணர்வுகள் ஒலிபரப்பப்பட்டும் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மணற்பரப்பில் செல்லக்கூடிய All Terrain Vehicle, ஜிப்சி ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து சுற்றி வரப்பட்டும், ஒலி பெருக்கிகள் மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டும், குற்றவாளிகள் கண்காணித்து, அசம்பாவிதங்கள் நிகழாமல் கண்காணிக்கப்பட்டது. மேலும், டிரோன் கேமரா மூலம் கூட்டத்தை கண்காணித்து, கடற்கரை மணற்பரப்பில் குற்றங்கள் நிகழாமல் கண்காணிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, நேற்று (01.01.2023) மதியம் முதல் இரவு வரை உழைப்பாளர் சிலை பின்புறமுள்ள கடற்கரை மணற்பரப்பில் கூட்டத்தில் காணாமல் போன 17 குழந்தைகள் மற்றும் 3 முதியவர்கள் என 20 நபர்கள் மீட்கப்பட்டு, மேற்படி கட்டுப்பாட்டறையில் ஒப்படைத்ததின்பேரில், மீட்கப்பட்ட குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெற்றோர் மற்றும் உரியவர் வசம் ஒப்படைக்கப்பட்டனர். காணாமல் போன குழந்தைகளை மீட்ட பெற்றோர் கண்ணீர் மல்க காவல்துறைக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் கடற்கரை மணற்பரப்பில் மேற்கொண்ட சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மூலம் குற்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x