Published : 20 Jul 2014 08:55 AM
Last Updated : 20 Jul 2014 08:55 AM
மாற்றுத் திறனாளிகளின் இன்னல்களை உணர்ந்து அதற்கேற்ற சில வசதிகளைச் செய்துதராமல் பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் நடத்தப் படுகின்றன என்று சென்னைப் பெருநகர விரைவுப் போக்குவரத்து அமைப்பையும் புறநகர மின்சார ரயில் பயண கட்டமைப்பையும் சென்னை நகர மாற்றுத்திறனாளிகள் ஆதரவா ளர்கள் அமைப்புகள் சாடிவந்தன. அந்தப் புகார்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் சேவையில் இடமிருக்காது.
மாற்றுத்திறனாளிகள் எளிதில் ரயில் பயண டிக்கெட் வாங்கவும், பெட்டிகளில் தாங்களாகவே தங்களுடைய தள்ளுவண்டி களுடன் ஏறி அமரவும், ரயில் நிலையங்களுக்கு எளிதாக வரவும், ரயில் நிலையங்களிலிருந்து வெளி யேறவும், கழிப்பிடங்களைப் பயன் படுத்தவும் வசதிகள் செய்து தரப்படவில்லை என்று பல ஆண்டுகளாகவே முறையிடப்பட்டு வருகிறது.
மெட்ரோவில் புதிய தொடக்கம்
சி.எம்.ஆர்.எல். என்று அழைக்கப் படும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளுக்கு உதவு வதற்காக 30 மக்கள் தொடர்பு உதவியாளர்களைத் தேர்வு செய்து பயிற்சி தருகிறது.
செவித்திறன் குறைந்த வர்களுக்கு உதவி செய்ய அந்த 30 பேருக்கும் சைகை மொழியில் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. ‘வி-சேஷ்' என்ற அமைப்பின் ராஜசேகர் இவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார்.
காதுகேளாத பயணிகள் ரயில் நிலையத்துக்குள் வந்தால் அவர்களுடைய கேள்விகளைப் புரிந்துகொள்ளவும் அவர்களுக்குப் புரியும் விதத்தில் பதில் அளிக்கவும் இந்த பயிற்சி உதவும். மாற்றுத் திறனாளிகள் நிலையத்துக்கு வந்தால் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி அவர்களுக்கு எப்படி உதவ வேண்டும் என்பதிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்னும் சில வாரங்களுக்கு வெவ்வேறு அம்சங்களிலும் பயிற்சி அளிக்கப்படும்.
மெட்ரோ ரயில் நிலையங்க ளுக்கு வரும் வாடிக்கையாளர் களுக்குத் தேவைப்படும் தகவல் களைத் தருவது, நிலையத்தில் எந்தெந்த வசதிகள் எங்கெங்கே இருக்கின்றன என்று தெரிவிப்பது, பயணிகள் செல்ல வேண்டிய இடத்துக்கான மெட்ரோ ரயில்கள் எப்போது வரும், எங்கே இறங்கிச் செல்ல வேண்டும் என்ற தகவல் களை அளிப்பது, ரயில் நிலையங் களுக்கும் ரயில் பயணிகளுக்கும் பாதுகாப்பு அளிப்பது, விபத்து அல்லது வேறு ஏதாவது அசம்பா விதம் ஏற்பட்டால் பயணிகளுக்கு உதவுவது ஆகியவையும் இந்தப் பயிற்சிகளில் அடங்கும்.
‘மாற்றுத் திறனாளர் உரிமைகள் கூட்டமைப்பை' சேர்ந்த சிலர், சி.எம்.ஆர்.எல். அதிகாரிகளைச் சமீபத்தில் சந்தித்து கூடுதலாகச் சில யோசனைகளைத் தெரிவித் துள்ளனர். மெட்ரோ ரயில் நிலையங்களில் நிறுவப்படும் மின்தூக்கிகளில் (லிஃப்ட்) அழைப்பு மணியைப் பொருத்துங்கள், மாற்றுத் திறனாளிகள் அதன் மூலம் அழைத்ததும் மின்தூக்கி கடைசியாக நிற்கும் இடத்தில் உதவியாளர்கள் சக்கர நாற்காலியுடன் வந்து நிற்கவும் ரயிலில் ஏற வசதியாக நடை மேடைக்கு அழைத்துச் செல்லவும் உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.
நாங்கள் கூறிய யோசனைகளை அதிகாரிகள் பொறுமையாகக் கேட்டனர், ரயில் நிலையங்களில் எந்த மாதிரியான சக்கர நாற் காலிகளை வைக்கலாம் என்றுகூட கேட்டனர் என்று மாற்றுத்திறனாளர் உரிமைகள் கூட்டமைப்பின் (டி.ஆர்.ஏ.) உறுப்பினர் வைஷ்ணவி ஜெயகுமார் தெரிவித்தார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான சேவைகள் சிலவற்றை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டால் அதை முன்கூட்டியே குறுந்தகவல் மூலம் அவர்களுக்குத் தெரிவிக்க தனி மெசேஜ் சேவையையோ, இணையதளத்தில் தனி பக்கத் தையோ பயன்படுத்துமாறு யோசனை கூறியிருப்பதாக அம்பா சலேல்கர் குறிப்பிட்டார். ‘மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டம், கொள்கைகளுக்கான மையம்' என்ற அமைப்பைச் சேர்ந்தவர் இவர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ தனியாக பணியாளர்களை நியமிப்பது வரவேற்கத்தக்கது. சேவை தொடங்கிய பிறகு இவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பது முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அசத்தப் போகும் வசதிகள்
டெல்லி, பெங்களூர், மும்பை மெட்ரோ ரயில்நிலைய வசதிகளைவிட சென்னையில் வசதிகள் அதிகமாக இருக்க வேண்டும் என்ற கவனத்துடன் நிலைய வடிவமைப்பில் சில மாறுதல்களை சி.எம்.ஆர்.எல். செய்துள்ளது.
* ரயில் நிலைய அடித்தளத்தை நெருங்கும் மாற்றுத்திறனாளிகள் பயணச் சீட்டு வழங்கும் இடத்துக்கு தாங்களாகவே எளிதாகச் செல்ல, சிறப்பு வண்ணம் தீட்டிய நடந்தால் வழுக்கியோ தடுக்கியோ விழாத வகையில் நடைபாதைகள் நிறுவப்படும். பயணச் சீட்டு வாங்கிய பிறகு ரயில்நிலைய நடைமேடைக்கு மின்தூக்கிகள் மூலம் மாற்றுத்திறனாளிகள் அழைத்துச் செல்லப்படுவர்.
* ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளில் காது கேளாதோர், டிக்கெட் வழங்கும் ஊழியருடன் எளிதில் பேச தனி தகவல்தொடர்பு வசதி செய்துதரப்படும்.
* ரயில் நிலையங்களுக்குள் செல்வதற்கு படிகளற்ற சாய்வுதளம் அமைக்கப்படும். இதை மாற்றுத் திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்த முடியும்.
* ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் 4 இருக்கைகள் மாற்றுத் திறனாளி களுக்காக ஒதுக்கப்படும்.
* அடுத்து வரும் ரயில் நிலையம் குறித்து ரயிலுக்குள் முன்கூட்டியே ஒலிபெருக்கி மூலமும் ஒளிரும் மின்எழுத்துகள் மூலமும் தெரிவிக்கப்படும்.
* சக்கர நாற்காலிகளை எளிதில் உள்ளே எடுத்துச் செல்லவும் மாற்றுத் திறனாளிகளை அழைத்து வரவும் மின்தூக்கிகள் நன்கு அகலமாக இருக்கும். பார்வை யற்றவர்களும் தடவித் தெரிந்து கொள்ளும் வகையில் பிரெய்லி முறையில் அதில் பொத்தான்கள் இருக்கும். கைப்பிடிகளும் இதர வசதிகளும் செய்து தரப்படும்.
* இறங்கும் நிலையத்தில் உதவியாளர் தேவை என்று மாற்றுத் திறனாளி முன்கூட்டியே தெரிவிக்க, ஒருவழித் தகவல் தொடர்பு ஏற்பாடும் செய்துதரப்படும்.
* பயணி வெளியேற தாமதம் ஏற்படும் என்றால் அதை ரயில் குழுவினருக்குத் தெரிவிக்க ரயில் பெட்டிகளுக்குள்ளேயே தனி பொத்தான்கள் பொருத்தப் பட்டிருக்கும்.
* எல்லா பயணிகளும் ரயில் பெட்டிக்குள் ஏறுவதையும் இறங்குவதையும் கண்காணிக்க எல்லா நடைமேடைகளிலும் 2 கேமரா பொருத்தப்பட்டிருக்கும்.
சுருக்கமாக சில தகவல்கள்
* கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 10 கி.மீ. பாதையில் மெட்ரோ ரயில் சேவை அக்டோபரில் தொடங்கும்.
* சென்னை மெட்ரோவில் பயன்படப்போகும் மொத்த ரயில்கள் எண்ணிக்கை 42. (பிரேசிலின் சாவ்பாவ்லோ நகரிலிருந்து 9, ஆந்திரத்தின் சிட்டியிலிருந்து 33).
* ரயில்களின் நீளம்: 90 மீட்டர். பெட்டியின் நீளம் 22.5 மீட்டர்.
* ஒவ்வொரு ரயிலிலும் செல்லக்கூடிய பயணிகள்: 1,200.
* மெட்ரோ ரயிலின் சராசரி வேகம்: மணிக்கு 34 கி.மீ.
* மெட்ரோ ரயில்களின் செயல்பாட்டு வேகம்: 80 கி.மீ.
* ரயில் ஒவ்வொரு நிலையத்திலும் நிற்கும் நேரம்: 30 விநாடிகள்.
* தரைக்கு மேலே ரயில் பறக்கும் பகுதிகளில் மொத்தம் 53 மின் தூக்கிகளும் 89 நகரும் படிக்கட்டுகளும் நிறுவப்படும்.
* சேவை நேரம்: அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு வரை.
சில யோசனைகள்
* மின் தூக்கிகளும் கழிப்பறைகளும் எல்லா நேரமும் நல்ல நிலையில் பராமரிக்கப்பட வேண்டும்.
* பார்வைக்குறைவு உள்ள பயணிகள் பயன்படுத்த உதவியாக ஸ்மார்ட் கார்டில் தொட்டுணரக் கூடிய சில ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
* மாற்றுத் திறனாளிக்கு உதவி தேவைப்பட்டால் உதவியாளருக்கு முன்கூட்டியே தகவல்தர மின்தூக்கிகளில் அழைப்பு மணிகள் பொருத்தப்பட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT