Published : 10 Dec 2016 09:11 AM
Last Updated : 10 Dec 2016 09:11 AM
திருநெல்வேலி மாவட்டம், கலிங் கப்பட்டியில் கிராமப் பஞ்சாயத்து தீர்மானத்தின் அடிப்படையில் அரசு மதுபானக் கடையை மூடச் செய்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வருவதற்கான சட்டப்பூர்வமான திறவுகோலாக கருதப்படுகிறது. இதை முன்வைத்தே திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மதுக்கடைகளை அகற்றுவதற்கான பணிகள் தொடங்கியிருக்கின்றன.
கலிங்கப்பட்டியிலிருக்கும் அரசு மதுபானக் கடையை மூட வேண்டும் என்று அந்த கிராமப் பஞ்சாயத்து தீர்மானம் இயற்றியிருந்தது. மாவட்ட ஆட்சியர் தீர்மானத்தை ரத்து செய்ததால் பிரச்சினை நீதிமன்றம் சென்றது. நீதிமன்றத்தில் அரசு தரப்பு, “ஒரு பஞ்சாயத்தின் தீர்மானத்தை ஏற்றால், பிறகு தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான டாஸ்மாக் கடைகளை மூட வேண்டிவரும்” என்று வாதிட்டது. இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், “மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை உணர்ந்தே பஞ்சாயத்து மதுபானக் கடையை மூட வலியுறுத்துகிறது. கிராமப் பஞ்சாயத்தின் தீர்மானத்தை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்தது செல்லாது. சம்பந்தப்பட்ட கடையை நிரந்தரமாக மூட வேண்டும்” என்று தீர்ப்பளித்தது.
கடை மூடப்பட்டது.
இந்த வழக்கில் அரசு தரப்பு முன் வைத்த வாதத்தின் அடிப்படையில் ‘கிராமப் பஞ்சாயத்துகள் தீர்மானம் இயற்றினால் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட முடியும்’ என்பதை அரசே ஒப்புக்கொள்கிறது. அதே சமயம் ஏற்கெனவே இதே முறையில் கன்னியாகுமரி மாவட்டத்தின் அடைக்கன்குழி கிராமத்தில் அரசு மதுபானக் கடை மூடப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து அடைக்கன்குழி முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் ரெஜி கூறும்போது, “கடந்த 2013-ம் ஆண்டில் எங்கள் கிராமப் பஞ்சாயத் தில் கிராம சபைக் கூட்டத்தில் தீர் மானம் நிறைவேற்றி அரசு மது பானக் கடையை அகற்றக் கோரி னோம். ஆனால், மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நீதிமன்றத்தை அணுகி னோம். தீர்ப்பு பஞ்சாயத்துக்கு சாதகமாக வந்தது (W.P.(MD)No.11992 of 2013). எனவே கடையை மூடினார்கள். நாங்கள் பெற்ற நீதிமன்ற தீர்ப்பை முன்வைத்து திருவட்டாறு ஒன்றியத்திலும் தீர்மா னம் நிறைவேற்றி, அவர்கள் பகுதி யில் இருந்த மதுபானக் கடையை யும் அகற்றினார்கள்” என்றார்.
மதுவால் சீரழிந்து கொண்டிருக் கும் தமிழகத்தின் இன்றைய சூழ லில் கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி உயர் நீதிமன்றம் அளித்த மேற்கண்ட தீர்ப்பு மிக முக்கியத் துவம் வாய்ந்தது. அதனாலேயே, அந்தத் தீர்ப்பை முன்வைத்து தற்போது தமிழகத்தின் சில பஞ்சாயத்துகளில் தீர்மானம் இயற்றி சட்டப்பூர்வமாக தங்கள் பகுதியிலிருக்கும் மதுக்கடைகளை மூட முடிவு செய்துள்ளனர். சில பஞ்சாயத்துகளில் ஏற் கெனவே இயற்றப்பட்ட பழைய தீர்மானத்தை வைத்து நடவடிக்கை களை தொடங்கியிருக்கின்றனர். அந்த வகையில் திருவாரூர் மாவட் டம், மணக்கால் கிராமத்தில் இருக் கும் அரசு மதுபானக் கடையை அகற் றும் முயற்சி நடந்து வருகிறது.
இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த தென்னரசு கூறும்போது, “எங்கள் கிராமத்தில் கடந்த 2015-ம் ஆண்டு அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி பஞ்சாயத்து தீர்மானம் நிறைவேற்றினார்கள். அந்த தீர்மான நகலை கேட்டு வாங்கியிருக்கிறோம். இப்போது உடனே நீதிமன்றத்துக்கு செல்லக் கூடாது. மாவட்ட நிர்வாகம் மறுத்தால் மட்டுமே நீதிமன்றம் செல்ல வேண்டும். அதனால், அந்த தீர்மான நகல் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவை இணைத்து திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் எங்கள் கிராமத்திலிருக்கும் மதுக்கடையை அகற்றும்படி மனு கொடுத்திருக்கிறோம். மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை பொறுத்து அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுப்போம்” என்றார்.
கிராமப் பஞ்சாயத்துகளுக்காக பணிபுரிந்து வரும் தன்னார்வலர் நந்தகுமார் இதுகுறித்து கூறும் போது, “மதுவிலக்கு கோரி பல் வேறு வகையிலான போராட்டங்கள் நடந்தன. சசிபெருமாள் உயிர்த் தியாகம் செய்தார். எதையும் சட்டப் பூர்வமாக அணுகுவது புத்தி சாலித்தனமானது, பாதுகாப் பானது. அந்த வகையில் சமீபத்தில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அனைத்து பஞ்சாயத்துகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பஞ்சாயத்து தலைவர்கள்தான் இதனை முன்னெடுக்க வேண்டும் என்றில்லை. அந்த கிராமத்தின் வாக்காளர் அல்லது தன்னார்வலர் எவர் வேண்டுமானாலும் இதனை முன்னெடுத்து தீர்மானம் இயற்ற வலியுறுத்தலாம். அதனை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பலாம்.
அத்துடன் கூடுதலாக, கிராம பஞ்சாயத்துகளுக்கு இந்திய அரசி யல் அமைப்புச் சட்டம் சட்டப் பிரிவு 243 (ஜி)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள குடும்ப நலவாழ்வு இணைப்புப் பட்டியல் XI (24), நலிவுற்ற பிரிவினர் பட்டியல் XI (27) இணைத்து விண் ணப்பிக்க வேண்டும். மேலும் தாழ்த் தப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடி யினர் நலம் அடிப்படையில் மது பானக் கடையை அகற்ற வேண் டும் என்றும் மனுவில் குறிப்பிட வேண்டும். இதுபோன்று செய்யும் போது ஒரு மாவட்ட ஆட்சியர் அவ் வளவு எளிதாக மனுவை நிராகரிக்க முடியாது. நிராகரித்தாலும் அதற்கான பதிலை நீதிமன்றத்துக்கு சொல்லியாக வேண்டும்” என்றார்.
வழிகாட்டுகிறது நீதிபதி எழுதிய புத்தகம்
முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு, ‘சட்டப்படி மதுக்கடைகளை மூடுவது எப்படி?’ என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.
அதில், பொது இடங்களில் சட்டவிரோத தடைகள் அல்லது தொந்தரவுகள் இருந்தால் காவல் நிலைய அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட குற்றவியல் நடுவர் (ஆட்சியர்) தொந்தரவுகளை நீக்க உத்தரவிடலாம் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் 133-ம் பிரிவு கூறுகிறது. அதன் அடிப்படையில் மதுபானக் கடையை அகற்ற கோரலாம். வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகில் இருக்கும் கடைகளையும் இதே வழியில் அகற்ற கோரலாம். குறிப்பிட்ட மதுக்கடை அமைந்திருக்கும் காவல் நிலையத்தில் கடந்த இரு ஆண்டுகளில் பதிவான வழக்குகள் மற்றும் மாநகரக் காவல் சட்டம் பிரிவு 75(1)(பி)-ன் கீழ் குற்ற விவரங்களை கேட்டு வாங்கி மனுவுடன் இணைக்கலாம். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அந்த மதுக்கடையை அகற்ற அரசியலமைப்புச் சட்டம் 226-ன் கீழ் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்யலாம். சாலை விபத்துகள் அதிகம் நடந்தால் அதன் அடிப்படையில் வழக்கு தொடரலாம் என்பன உள்ளிட்ட விஷயங்கள் விரிவாக எழுதப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT