Last Updated : 02 Jan, 2023 04:43 AM

 

Published : 02 Jan 2023 04:43 AM
Last Updated : 02 Jan 2023 04:43 AM

மழை, அணைகளில் நீர் திறப்பு தள்ளிப்போனதால் தாமதமாக தொடங்கிய பிசான நெல் சாகுபடி - இலக்கை எட்ட முடியுமா?

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசன பகுதியில் ஆண்டுதோறும் பிசான நெல் சாகுபடி நடைபெறுகிறது. வழக்கமாக நவம்பர் தொடக்கத்தில் பிசான நெல் சாகுபடி பணிகள் தொடங்கிவிடும். அதற்கேற்ப வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடக்கத்திலேயே தொடங்கிவிடும். அணைகளில் இருந்தும் அக்டோபர் 15-ம் தேதிக்கு மேல் தண்ணீர் திறக்கப் பட்டுவிடும்.

ஆனால், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29-ம் தேதி தான் தொடங்கியது. இதனால் பிசான நெல் சாகுபடிக்காக அணைகளில் இருந்து நவம்பர் 4-ம் தேதி தான் தண்ணீர் திறக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட போதிலும் இதுவரை போதுமான மழை பெய்யவில்லை. பெரும்பாலான நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரவில்லை.

தாமிரபரணி பாசனத்தில் உள்ள ஒருசில குளங்களில் ஏற்கெனவே இருந்த தண்ணீரை நம்பி சில பகுதிகளில் மட்டும் விவசாயிகள் நவம்பர் மாத தொடக்கத்தில் பிசான நெல் நடவு பணிகளை மேற்கொண்டனர். அந்த இடங்களில் மட்டும் தற்போது நெல் பயிர் ஓரளவு வளர்ச்சியடைந்துள்ளது. மற்ற அனைத்து பகுதிகளிலும் தற்போது தான் பிசான நெல் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வழக்கமாக ஜனவரி மாதம் 15-ம் தேதிக்கு மேல் பிசான நெல் அறுவடை பணிகள் தொடங்கிவிடும். இந்த ஆண்டு பிசான நெல் நடவு பணிகளே ஜனவரி 15 வரை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இது குறித்து தூத்துக்குடி அருகேயுள்ள காலாங்கரை பகுதியைச் சேர்ந்த விவசாயி இருளப்பன் கூறும்போது, “கோரம்பள்ளம் குளத்தில் இந்த ஆண்டு ஏற்கெனவே ஓரளவுக்கு தண்ணீர் இருந்தது. இதனால் முன்கூட்டியே பிசான நெல் நடவு பணிகளை செய்துள்ளோம். தற்போது பயிர்கள் 25 நாட்கள் வளர்ந்த நிலையில் உள்ளன. உரமிடுதல், களை பறித்தல் பணிகளை தற்போது செய்து வருகிறோம். மழை சரியாக பெய்யாத போதும் குளத்தில் போதுமான தண்ணீர் இருப்பதால் இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு வராது என எதிர்பார்க்கிறோம்” என்றார் அவர்.

உரங்கள் இருப்பு: மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பழனிவேலாயுதம் கூறும்போது, “மாவட்டத்தில் இயல்பான நெல் சாகுபடி பரப்பு 14,386 ஹெக்டேர். கடந்த ஆண்டு 16,200 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் 19,477 ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு 16 ஆயிரம் ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 8,000 ஹெக்டேர் அளவுக்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது பிசான நெல் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜனவரி மாதத்தில் 16 ஆயிரம் ஹெக்டேர் என்ற இலக்கை எட்டிவிடலாம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த ஆண்டு பிசான நெல் சாகுபடியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஜனவரி மாதம் 15-ம் தேதி வரை பிசான நெல் நடவு பணிகள் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். டிஏபி, யூரியா உள்ளிட்ட உரங்கள் மற்றும் இடுபொருட்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x