Published : 02 Jan 2023 04:43 AM
Last Updated : 02 Jan 2023 04:43 AM
திருச்சி: திருச்சி மாநகர காவல் ஆணையரகம் தொடங்கப்பட்டு, 25 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், மாநகரின் முதல் பெண் காவல் ஆணையராக எம்.சத்தியபிரியா பொறுப்பேற்க உள்ளார்.
திருச்சி மாவட்ட காவல் துறையிலிருந்து மாநகர பகுதிகளைப் பிரித்து, திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தை உருவாக்கும் வகையில் 1.6.1997 அன்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக மாநகரத்தின் முதல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரியான வடிவேலு 8.6.97 அன்று பொறுப்பேற்றார்.
32-வது காவல் ஆணையர்: அவரைத் தொடர்ந்து கே.ராதாகிருஷ்ணன், விபாகர் சர்மா (2 முறை), ஜே.கே.திரிபாதி, அசுதோஷ் சுக்லா, சி.வி.ராவ், எஸ்.ஜி. ராஜேந்திரன், ஏ.அலெக்ஸாண்டர் மோகன் (2 முறை), சுனில்குமார் சிங் (2 முறை), பிரதீப் வி.பிலிப், சங்கர் ஜிவால், அசோக்குமார்தாஸ், பிரமோத்குமார், கரன்சின்கா, கருணாசாகர், கே.வன்னியபெருமாள், மா.மாசானமுத்து, சைலேஷ்குமார் யாதவ், சஞ்சய் மாத்தூர், எம்.என்.மஞ்சுநாதா, ஏ.அருண் (2 முறை), ஏ.அமல்ராஜ், வி.வரதராஜூ, ஜே.லோகநாதன், க.கார்த்திகேயன் ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகள் திருச்சி மாநகர காவல் ஆணையர்களாக பணியாற்றியுள்ளனர்.
க.கார்த்திகேயன் காவல் ஆணையராகப் பொறுப்பேற்று 15 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது அவர் மத்திய மண்டல ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக காஞ்சிபுரத்தில் டிஐஜியாக பணியாற்றிய எம்.சத்தியபிரியா ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் திருச்சி மாநகர காவல்துறை உருவாக்கப்பட்டு, செயல்பாட்டிலுள்ள கடந்த 25 ஆண்டுகளில் 32-வது ஆணையராக பொறுப்பேற்கும் சத்தியபிரியா மாநகரின் முதல் பெண் காவல் ஆணையர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
தெற்கு சூடானில் ஐ.நா பணி: 1997-ம் ஆண்டு காவல் துறையில் வேலூர் டிஎஸ்பியாக பணிக்குச் சேர்ந்த இவர், 2006-ம் ஆண்டு எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று சேலம் மற்றும் திருச்சி மாநகரங்களில் சட்டம், ஒழுங்கு துணை ஆணையர், நாமக்கல் மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்தார். அதன்பின் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று காவலர் பயிற்சிப் பள்ளி, காஞ்சிபுரம் சரகங்களில் பணிபுரிந்துள்ளார்.
இவர், ஏற்கெனவே கடந்த 2012 ஜூலை முதல் 2013 பிப்ரவரி வரை திருச்சி மாநகர காவல் துறையில் துணை ஆணையராக பணியாற்றியபோது மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில், தெற்கு சூடான் நாட்டுக்குச் சென்று, ஐ.நா பணிக் குழுவில் சேர்ந்து காவல் ஆலோசகராக ஓராண்டு பணியாற்றினார்.
2014-ல் மீண்டும் இங்கு பணியில் சேர வந்தபோது, தமிழக காவல் துறையில் அனுமதி பெறாமல் தெற்கு சூடான் சென்றதாகக் கூறி, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், மத்திய அரசு அதை ஏற்க மறுத்ததால், சத்தியபிரியா மீண்டும் தமிழக காவல்துறை பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். இவரது மெச்சத்தக்க பணியைப் பாராட்டி 2020-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரவுடிகளை ஒடுக்க, கஞ்சாவை தடுக்க..: இது குறித்து காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள எம்.சத்தியபிரியா ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறும்போது, "முக்கியத்துவம் வாய்ந்த திருச்சி மாநகர காவல் துறையின் முதல் பெண் காவல் ஆணையராக பொறுப்பேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இங்கு துணை ஆணையராக பணியாற்றியுள்ளதால், திருச்சி மாநகரம் எனக்கு நன்கு அறிமுகமான இடம்தான். இங்கு ரவுடிகளின் செயல்பாடுகளை முற்றிலும் கட்டுப்படுத்துவதற்கும், கஞ்சா விற்பனையைத் தடுக்கவும் முன்னுரிமை அளித்து செயல்படுவேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT