Published : 01 Jan 2023 06:18 PM
Last Updated : 01 Jan 2023 06:18 PM
மதுரை: மக்களவைத் தேர்தலையொட்டி அதிமுக சார்பில், மாபெரும் மாநாடு நடத்துவது குறித்து ஆலோசிக்க இருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "உலக மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டி மீனாட்சி அம்மனை வேண்டினேன். அதிமுகவுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. நாங்கள் விரைவில் ஆட்சிக்கு வரவேண்டும் என, மக்கள் எதிர்நோக்குகின்றனர். திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்கள், அழிக்க முடியாத கல்வெட்டாக உள்ளன.
அதிமுகவிற்கு இவ்வாண்டு மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். 2024 மக்களவை தேர்தலையொட்டி விரைவில் மாபெரும் மாநாடு நடத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளோம். தனிமனிதர், தனி குடும்பம் என்பது இன்றி ஜனநாயக அடிப்படையில் இருக்கவேண்டும் என்பதற்கு சாட்சியாக அதிமுக செயல்படுகிறது. வருகிற ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்க வேண்டும்.
புதிய வைரஸ் தொற்று இல்லாத ஆண்டாக மாறவேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை மாதம் ரூ.ஆயிரம் வழங்கியிருந்தாலும், சிலிண்டர் மானியம் மாதம் ரூ.100 என கணக்கிட்டால் இதுவரை ஒவ்வொரு மகளிர்க்கும் திமுக அரசு ரூ. 22 ஆயிரம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கொடுக்கவில்லை. இப்போது, பொங்கலுக்கான ஆயிரம் ரூபாய்க்கே தடுமாறி அறிவித்துள்ளனர். அதிமுக போராட்டத் திற்கு பயந்து, பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு அறிவிப்பு வந்தது.
ரூ.33க்கு எத்தனை அடி கரும்பு கொள்முதல் செய்து, எத்தனை அடி மக்களுக்கு வழங்கப்படும் என, தெரியவில்லை. எத்தனை அடி கரும்பு வழங்கப்படும் என, ரேசன் கடையில் எழுதி வைக்கவேண்டும். திமுக அரசு பல்வேறு வரி, விலைவாசி உயர்வுக்கு பிறகு அறிவித்த பொங்கல் பரிசு அறிவிப்பு யானைப் பசிக்கு சோளப்பொறி என்பது போலதான் உள்ளது" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT