Published : 01 Jan 2023 04:51 PM
Last Updated : 01 Jan 2023 04:51 PM

பாஜகவின் வளர்ச்சிக்கு அதிமுக காரணம் என்று சொல்லமுடியாது: வைகோ பேட்டி

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ

சென்னை: "பாஜகவின் வளர்ச்சிக்கு அதிமுக காரணம் என்று சொல்லமுடியாது. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை ஏடுகளும் ஊடகங்களும் பெரிதுபடுத்துகின்றன. அவர்கள் வளர்ந்த அளவைவிட, பலமடங்கு ஏடுகளும் ஊடகங்களும் பிரம்மாண்டமான தோற்றத்தைக் கொடுக்கின்றன" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில், எதிர்க்கட்சிகளிடம் பலமான ஒற்றுமை இல்லாதது குறித்து கேள்வி எழுப்பப்பப்டடது. அதற்கு அவர், "இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்தால்தான் பாஜகவை வீழ்த்த முடியும். பாஜக வலுவாகத்தான் இருக்கிறது. எண்ணிக்கை அளவில் வலுவாக இருக்கும் அவர்கள், மீண்டும் அதே அளவு எண்ணிக்கையைப் பெறுவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.இப்போது பல கட்சிகளும் பிரிந்து கிடக்கின்றன. பாஜக அல்லாத மற்ற கட்சிகள் எல்லாம் ஒன்றுசேர்ந்தால்தான், பாஜகவை வீழ்த்தும் ஒரு நிலையை ஏற்படுத்த முடியும்" என்றார்.

அப்போது அவரிடம் அதற்கு வாய்ப்பிருக்கிருக்கிறது என்று நினைக்கிறீர்களா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "அதற்கு வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? என்று சொல்ல முடியாது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால்தான் அவர்களைத் தோற்கடிக்க முடியும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அவ்வாறு ஈடுபட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவருமே இப்போது சொல்ல ஆரம்பித்துவிட்டனர். எனவே அதற்கான வாய்ப்பு ஏற்படலாம்" என்றார்.

ராகுல் காந்தியின் நடை பயணம் குறித்த கேள்விக்கு,"ராகுல் காந்தியின் நடை பயணத்துக்கு நல்ல தாக்கம் இருக்கிறது. எல்லா இடங்களிலும் மக்களின் வரவேற்பு இருக்கிறது" என்றார்.

தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "ஏடுகளும் ஊடகங்களும் இதை பெரிதுபடுத்துகின்றன. அவர்கள் வளர்ந்த அளவைவிட, பலமடங்கு ஏடுகளும் ஊடகங்களும் பிரம்மாண்டமான தோற்றத்தைக் கொடுக்கின்றன.ஒவ்வொரு ஊரிலும் சென்று பணத்தைக் கொட்டுகின்றனர். கொடிக்கம்பம் நட்டால் இவ்வளவு பணம் கொடுக்கிறோம் என்று பணத்தைக் கொட்டி அவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.பாஜகவின் வளர்ச்சிக்கு அதிமுக காரணம் என்று சொல்லமுடியாது. அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினையின் காரணமாக அவர்களுக்குள்ளே பிளவுப்பட்டு போராடிக் கொண்டிருக்கின்றனர்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x