Published : 01 Jan 2023 01:03 PM
Last Updated : 01 Jan 2023 01:03 PM
சென்னை: உலகின் மிகக்கொடிய போதைமருந்து கடத்தல் கும்பல் தலைவனான முகமது நாஜிம் முகமது இம்ரான் தமது கூட்டாளிகளுடன் தமிழ்நாட்டிற்கு ஊடுருவியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: ''உலகின் மிகக்கொடிய போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனான முகமது நாஜிம் முகமது இம்ரான் தமது கூட்டாளிகளுடன் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு ஊடுருவியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. எல்லையோர பாதுகாப்பு குறைபாடுகளையே இது காட்டுகிறது.
முகமது இம்ரான் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தப்பி வரக்கூடும் என்று தமிழக உளவுத்துறைக்கு மத்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதற்குப் பிறகும் கடலோரக் காவல்படை, தமிழகக் காவல்துறையின் பாதுகாப்பை மீறி முகமது இம்ரான் தமிழகத்தில் நுழைந்தது எப்படி?
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஹெராயின், கோகெய்ன் கடத்தல் கும்பல்களுடன் முகமது இம்ரானுக்கு வலிமையான பிணைப்பு உண்டு. 2019-ஆம் ஆண்டில் துபையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இம்ரான், அங்கு பிணையில் விடுதலையான நிலையில் தப்பியுள்ளான்.
தமிழகத்தில் போதைமருந்து கலாச்சாரம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் முகமது இம்ரானின் ஊடுருவல் நிலைமையை மேலும் மோசமாக்கக் கூடும். முகமது இம்ரானை உடனடியாக கைது செய்து நாடு கடத்த வேண்டும்.'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT