Published : 01 Jan 2023 10:18 AM
Last Updated : 01 Jan 2023 10:18 AM
திருச்சி/ புதுக்கோட்டை: திருச்சி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்துப் பணிகளையும் கண்காணிக்க புகைப்படத்துடன் கூடிய வருகைப்பதிவு இன்று (ஜன.1) முதல் அறிமுகம் செய்யப்படுகிறது.
இது குறித்து ஆட்சியர் மா.பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஒரு பணித்தளத்தில் 20 பணியாளர்களுக்கு குறையாமல் மேற்கொள்ளப்படும் தொழிலாளர் சார்ந்த திறன் சாராப் பணிகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட முன்னுரிமை பணிகளை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்தும் வகையில், 21.05.2022 முதல் தினந்தோறும் காலை மற்றும் மதியம் ஆகிய இரு நேரங்களில் பணியாளர்களின் வருகைப்பதிவு மற்றும் புகைப்படம் ஆகியவை என்எம்எம்எஸ் செயலி மூலம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜன.1-ம் தேதி(இன்று) முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெறும் அனைத்துப் பணிகளுக்கும் (பணியாளர் குறைவெண் வரம்பின்றி) காலை மற்றும் மதியம் ஆகிய இரு நேரங்களிலும் என்எம்எம்எஸ் செயலி மூலம் வருகைப் பதிவு மற்றும் புகைப்படம் ஆகியவை எடுக்கப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் அடிப்படையிலேயே பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு இன்று முதல்(ஜன.1) பிரத்யேக செயலி மூலம் மட்டுமே வருகைப்பதிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT