Published : 01 Jan 2023 04:09 AM
Last Updated : 01 Jan 2023 04:09 AM
சென்னை: சமூக பாதுகாப்பு திட்டங்களின்கீழ், மாற்றுத் திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘வருவாய் துறைவழியாக ஓய்வூதியம் பெற்றுவரும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 பேருக்கு தற்போது மாத ஓய்வூதியம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இது, ரூ.1,500 ஆக ஜனவரி 1-ம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.263.56 கோடி கூடுதல் செலவாகும்’’ என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை நேற்று முன்தினம் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: பார்வையற்ற மாற்றுத் திறனுடையோர் உள்ளிட்ட அனைத்து மாற்றுத் திறனுடையோர்களுக்கும் வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கவும், டிசம்பர் முதல் நடைமுறைப்படுத்தவும், ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு முடிவு செய்தும், இதற்காக, ரூ.65 கோடியே 89 லட்சத்து 72 ஆயிரத்து 500 ஒதுக்கீடு செய்தும் அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT