Published : 01 Jan 2023 03:59 AM
Last Updated : 01 Jan 2023 03:59 AM

மதுரை, ராமேசுவரம், திருவண்ணாமலை கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம்

மதுரை, ராமேசுவரம், திருவண்ணாமலை கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தலைமை செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக நேற்று தொடங்கிவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில் ஆகிய 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை, தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறைச் செயலர் பி.சந்தரமோகன், அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் பங்கேற்றனர்.

இதேபோல, காணொலி வாயிலாக மதுரையிலிருந்து வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.பூமிநாதன், ஏ.வெங்கடேசன், மதுரை மாநகராட்சி மேயர் வி.இந்திராணி பொன்வசந்த், மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர், திருவண்ணாமலையிலிருந்து சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், ராமேசுவரத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தற்போது 754 கோயில்களில் மதிய நேரத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் ஆகியவற்றில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் கடந்த செப்டம்பர் 16-ம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகிய கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கிவைத்தார்.

2022-23-ம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின்போது, “நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஏற்கெனவே 5 கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை விரிவுபடுத்தி, ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில் மற்றும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆகிய 3 கோயில்களிலும், நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும்" என்று அறிவிக் கப்பட்டது.

அதன்படி, மூன்று கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை அன்னதானம் வழங்கப்படும். மூன்று கோயில்களிலும் சேர்த்து தினமும் 8 ஆயிரம் பக்தர்கள் அன்னதானம் பெற்று பயனடைவார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x