Published : 01 Jan 2023 04:40 AM
Last Updated : 01 Jan 2023 04:40 AM

கரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை - அரசாணைக்கு கட்சித் தலைவர்கள் கண்டனம்

சென்னை: கரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்று தமிழக சுகாதாரத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் கரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க,மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலமாகவும், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். மாதம் ரூ,14 ஆயிரம் ஊதியத்தில் பணியமர்த்தப்பட்ட அவர்களுக்கு, ஒவ்வொரு 6 மாத இடைவெளியில் பணி நீட்டிப்பு செய்யும் ஆணை வழங்கப்பட்டது.

இந்நிலையில், எம்ஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,472 செவிலியர்களுக்கு நேற்றுடன் பணி நீட்டிப்பு ஒப்பந்தம் முடிந்த நிலையில், மீண்டும் நீட்டிப்பு செய்யப்படவில்லை. அவர்களை பணியில் இருந்து விடுவிப்பதற்கான அரசாணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு கரோனா காலத்தில் 8,000 பணியிடங்கள்தான் நிரப்ப வேண்டியிருந்தது. அதிமுக ஆட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாமல் பணியமர்த்தப்பட்டவர்களை, பணி நிரந்தரம் செய்ய முடியாது.

கரோனா காலத்தில் தங்களது உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய, அவர்களை கைவிடக் கூடாது என்பதற்காக 2,300 பேரையும் இப்பணியில் இருந்து விடுவித்து, ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள இடங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

எனவே, அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாது. அங்கிருந்து, அவர்கள் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். அவர்களுக்கு நிறுத்திவைக்கப்பட்ட ஊதியமும், 4 நாளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்நிலையில், ஒப்பந்த செவிலியர்களை பணியில் இருந்து விடுவித்ததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், செவிலியர்களை பணியில் இருந்து நீக்குவது என்பது முன்யோசனை இல்லாத செயல், நிர்வாகத் திறமையற்ற நடவடிக்கை. செலவை குறைக்கிறேன் என்ற போர்வையில் சேவையை குறைப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: கரோனா தொற்று உள்ளவர்கள் குணமடைய அயராது பாடுபட்டவர்கள் செவிலியர்கள். அவர்களுக்கு நிரந்தர பணி ஆணை வழங்க வேண்டும். தவறினால், அவர்களுக்காக தமிழக பாஜக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும்.

சமூக சமத்துவத்துக்கான டாக்டர் சங்க பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்: எம்ஆர்பி மூலம் கரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட 3,700 செவிலியர்களில் 800 பேர் கடந்த மார்ச் மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 420 பேர் மட்டும் 2021 பிப்ரவரியில் நிரந்தரம் செய்யப்பட்டனர். எஞ்சிய 2,472 பேர் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 2019-ல் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்று இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள். பணி நீக்கம் செய்யப்பட்ட கரோனா செவிலியர்களுக்கு தற்காலிக பணி அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது கடந்த இரண்டரை ஆண்டுகாலம் பணிபுரிந்த செவிலியர்களுக்கு தண்டனை வழங்குவது போல உள்ளது. கரோனா காலத்தில் பணியில் சேர்ந்த அனைத்து செவிலியர்களுக்கும் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும். படிப்படியாக பணி நிரந்தரமும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் இதை வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x