Published : 21 Dec 2016 04:52 PM
Last Updated : 21 Dec 2016 04:52 PM
தமிழக தலைமைச் செயலாளரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது மத்திய துணை ராணுவப் படையினர் வரும் தகவல் தமிழக அரசுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை நகரத்துக்கு மத்திய துணை ராணுவப் படையின் வருகை குறித்து தமிழக பொதுச் செயலாளருக்கோ, காவல்துறை தலைவருக்கோ (டிஜிபி) எவ்வித தகவலும் அளிக்கப்படவில்லை.
இன்று (புதன்கிழமை) காலை, சென்னை அண்ணாநகரில் உள்ள தலைமைச் செயலர் ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை தொடங்கினர்.
காலை 6 மணிக்கு சோதனை தொடங்கிய நிலையில் பகல் 12 மணியளவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 15 பேர் ராமமோகன ராவ் வீட்டுக்கு வந்தனர். இதனால் அங்கு கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத மூத்த காவல்துறை அதிகாரி கூறும்போது, பொதுவாக ஒரு மாநிலத்தில் சட்ட ஒழுங்கு என்பது பிரச்சனையாக மாறும்போது மத்திய அரசு, தன்னுடைய படைகளை அனுப்பிவைக்கும். ஆனால் இந்த விஷயத்தில் மாநிலம் அத்தகைய வேண்டுகோள் எதையும் வைக்கவில்லை என்றார்.
அதேநேரம் வருவான வரிச் சட்டத்தின் 132-வது பிரிவின்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி மாநில, மத்திய அல்லது இரண்டு அரசுகளின் காவல்துறை அதிகாரிகளின் சேவைகளையும் கோரலாம். இதில் எவ்வித கட்டிடம், இடம், பொருள், வாகனம், புத்தகங்கள், மற்ற ஆவணங்கள், பணம், தங்க, வெள்ளிக்கட்டிகள், ஆபரணங்கள், இன்ன பிற விலை உயர்ந்த பொருட்களைச் சோதனையிட வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு உதவுவது ஒவ்வொரு காவல்துறை அதிகாரியின் கடமை என்று கூறப்பட்டுள்ளது.
அதே நேரம் உயர்நிலையில் உள்ள அரசு அதிகாரிகளைச் சோதனையிடும்போது, சட்ட ஒழுங்கு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகவோ, தேடுதலின்போது மாநில காவல்துறை அதிகாரிகளின் பற்றாக்குறையாலோ மத்திய அரசு தன் படையினரை அனுப்பலாம் என்று கூறப்படுகிறது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தின்போது, தமிழகத்துக்கு மத்திய போலீஸ் படையினர் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT