Published : 31 Dec 2022 08:22 PM
Last Updated : 31 Dec 2022 08:22 PM
மதுரை: தமிழகத்தில் முதல்முறையாக ரூ.40 லட்சம் பிணையில்லா கல்விக் கடன் வழங்கிய வங்கி அதிகாரிகளுக்கு இன்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பாராட்டு தெரிவித்தார்.
மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த மதியழகன் மகன் எம்.யோகேஷ்வர், ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் துறையில் பொறியியல் முதுகலை பட்டம் படிக்க தேர்வானார். இதற்காக மாணவர் எம்.யோகேஷ்வர், மதுரை தெற்குமாசி வீதியிலுள்ள யூனியன் வங்கிக்கிளையில் விண்ணப்பித்தார். விண்ணப்பித்த 4 மணிநேரத்தில் அம்மாணவருக்கு ரூ.40 லட்சம் பிணையில்லா கல்விக்கடன் வழங்க வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில் இன்று தெற்கு மாசி வீதியிலுள்ள யூனியன் வங்கி கிளையில் அலுவலகத்தில் கல்விக்கடன் வழங்கும் விழா வங்கியின் முதன்மை மேலாளர் வரதராஜன் தலைமையில் நடைபெற்றது. வங்கி கிளை மேலாளர் சார்லஸ், துணை மேலாளர் ரதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க மதுரை எம்.பி சு.வெங்கடேசன், மாணவர் யோகேஷ்வருக்கு ரூ.40 லட்சம் கல்விக் கடனுக்கான ஆணையை வழங்கினார். துரிதமாக செயல்பட்ட வங்கி அதிகாரிகளை எம்.பி பாராட்டினார்.
பின்னர் அவர் பேசும்போது, “தமிழ்நாட்டில் கல்விக்கடன் வழங்குவதில் மதுரை மாவட்டம் முன்னுதாரணமாக உள்ளது. நடப்பாண்டில் ரூ.200 கோடி கல்விக் கடன் வழங்க திட்டமிட்டுள்ளோம். யூனியன் வங்கியின் தெற்குமாசி கிளை மட்டுமே நடப்பாண்டில் இதுவரை ஒன்றரை கோடி வழங்கியுள்ளது. கடந்த ஆண்டினை போல இந்த ஆண்டும் மதுரை மாவட்டம் கல்விக்கடன் வழங்குவதில் சாதனை படைக்கும். இதன் மூலம் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வியை பெறுகின்றனர்”என்றார்.
இவ்விழாவில் மார்க்சிஸ்ட் கட்சி மாநகர மாவட்ட செயலாளர் மா.கணேசன், செயற்குழு உறுப்பினர் நரசிம்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT