Published : 31 Dec 2022 01:05 PM
Last Updated : 31 Dec 2022 01:05 PM
சென்னை: தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜனவரி 31 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின் நுகர்வோர் அனைவரும், தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 6-ம் தேதி மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, நவ.28-ம் தேதி முதல் மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். இம்மாதம் 31-ம் தேதி வரை மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இணையதளம் மட்டுமின்றி, மின்வாரிய அலுவலகங்களிலும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சர்வர் இணைப்பு அடிக்கடி துண்டிக்கப்படுவதால், ஆன்லைன் மூலம் ஆதாரை இணைக்க முடியாமல் நுகர்வோர் சிரமப்பட்டதைத் தொடர்ந்து, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற புதிய இணையதள முகவரியை வெளியிட்டது.
இந்நிலையில் நேற்று வரை 1.61 கோடி மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கான கால அவகாசம் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்," தமிழகத்தில் 60 சதவீத பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இதில் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 77 சதவீதம், குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரியில் 51 சதவீதம் இணைக்கப்பட்டுள்ளது. கால நீட்டிப்பு வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் ஜனவரி 31ம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. மீண்டும் கால நீட்டிப்பு இருக்கும் என்ற மன நிலையில் இருந்து விடாமல் ஜனவரி 31ம் தேதிக்குள் பொதுமக்கள் இந்த பணியை மேற்கொள்ள வேண்டும். இனி வரும் நாட்களில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு சென்று நடமாடும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்" இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT